சுவா சூ காங்கில் உள்ள பொதுப் பயனீட்டுக் கழக நீர்நிலையத்தில் வியாழக்கிழமை (மே 23) சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நச்சுவாயு தாக்கி உயிரிழந்த 40 வயது இந்திய ஊழியர் சீனிவாசன் சிவராமனின் உடல், சொந்த ஊரான தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், கம்பர்நத்தம் எனும் கிராமத்திற்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது.
இந்தத் தகவலை தமிழ் முரசிடம் பகிர்ந்த திரு மோகன் நவீன்குமார், 33, “உயிரிழந்த சிவராமன், என் உடன்பிறந்த மூத்த சகோதரி நர்மதாவின் கணவர் மட்டுமல்லர், என்னைப் படிக்க வைத்து, வாழவைத்த தாயுமானவரும் ஆவார்,” என்று கண்ணீர் மல்கச் சொன்னார்.
திரு சிவராமனின் மனைவி 35 வயது நர்மதாவும் அவர்களுடைய மகள்கள் மஹாஸ்ரீ, 9, ஸ்ரீநிஷா, 7, இருவரும் மே 2ஆம் தேதிதான் கோடை விடுமுறையைக் கழிக்க சிங்கப்பூர் வந்திருந்தனர்.
ஒரு மாதம் தந்தையுடன் ஒன்றாக இருந்துவிட்டு தாயகம் திரும்புவது அவர்களது திட்டமாக இருந்தது. இதற்காக பிள்ளைகள் இருவரும் அவர்களது பள்ளியில் கூடுதல் விடுமுறைக்கும் விண்ணப்பித்து உரிய அனுமதியும் பெற்றிருந்தனர்.
“என் அக்கா, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு மாமாவைப் பார்க்க சிங்கப்பூர் வந்திருப்பதால், நாங்கள் அனைவரும் விடுமுறையை ஒரே இடத்தில் கழிக்க விரும்பினோம்.
“அதன்படி நானும் என் மனைவி மற்றும் மகளை சிங்கப்பூர் வர ஏற்பாடு செய்தேன். எனவே பிடோக்கில் நான் வசித்து வந்த வீட்டில் என்னுடன் மாமாவும் குடும்பத்துடன் தங்கினார். கடந்த இருபது நாள்கள் எங்கள் வாழ்வின் மறக்க முடியாத நாள்களாக இருந்தன.
“இரு குடும்பங்களாக இணைந்து ஒவ்வொரு நாள் மாலையும் சிங்கப்பூரின் பல இடங்களுக்கு, குறிப்பாக பிள்ளைகளை ஆலயங்களுக்கும் கடற்கரைகளுக்கும் நாங்கள் வசித்து வந்த வீட்டிற்கு அருகேயுள்ள பூங்காக்களுக்கும் அழைத்துச் சென்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தோம்.
“திங்கட்கிழமை (மே 27) தொடங்கி வேலையில் மாமா விடுப்பு எடுத்துக்கொள்வதாக இருந்தது. அன்று குடும்பத்தினருடன் மலேசியாவிற்குச் சுற்றுலா செல்ல முடிவு செய்திருந்தோம். ஆனால் எங்கள் குடும்பத்தின் இந்த ஆசையெல்லாம் மாமாவின் பறிபோன உயிர்போல காற்றோடு கலந்துவிட்டது,” என்று சொல்லியழுதார் நவீன்குமார்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, சம்பவம் நடந்த அன்று, மாலை 5 மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிடுவேன் என்றும் அனைவரும் பிறகு கரையோரப் பூந்தோட்டங்களுக்குச் சென்று ஒளியூட்டைக் கண்டுகளிக்கலாம் என்றும் உற்சாகமாக சொல்லிவிட்டு திரு சிவராமன் காலையில் வழக்கம்போல பணிக்குச் சென்றுவிட்டார்.
உணவு விநியோக ஊழியரான திரு நவீன்குமார், அன்று வேலையில் இருந்தார்.
“அப்போது பிற்பகல் 3 மணிக்கு வந்த கைப்பேசி அழைப்பில், மாமா நச்சுவாயுவைச் சுவாசித்துவிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. என்னால் எதையும் புரிந்துகொள்ள இயலவில்லை. மாமாவுக்கு உடல்நலம்தான் பாதித்திருக்கும் என நினைத்து என் அக்காவையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றேன்.
“ஆனால், அங்கு சென்ற வேளையில் என் மாமா சிவராமன் உயிரிழந்திருந்தார்.
“தாங்கள் வரும்போது தங்களை வரவேற்க அப்பா எங்கே என்று கேட்கும் அவருடைய பிள்ளைகளிடம், அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை என்றுதான் இதுவரை சொல்லி வைத்திருக்கிறோம்,” என்று திரு நவீன்குமார் விவரித்தார்.
ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மாத விடுப்பில் தங்களை வந்து பார்த்துச் சென்ற தந்தையிடம், “நிரந்தரமாக நீங்கள் எங்களுடன் தங்க வேண்டும்,” என்று தொடர்ந்து கெஞ்சிய பிள்ளைகளிடம், அப்பா இனி ஒருபோதும் வரமாட்டார் என்று எப்படிச் சொல்வோம்?” என்று வேதனையுடன் கூறினார் திரு நவீன்குமார்.
கணவரின் இறந்த செய்தியைப் பிள்ளைகளிடம் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் தெரியாமல் இருக்கும் இல்லத்தரசியான சகோதரி நர்மதாவையும் அவருடைய மகள்களையும் தம் மனைவியுடன் வெள்ளிக்கிழமை (மே 24) தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்ததாக திரு நவீன்குமார் சொன்னார்.
சிங்கப்பூரில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி, சொந்த ஊரில் குடும்பத்தினர் நல்ல நிலையில் வாழ்வதற்கு உறுதுணையாக இருந்த திரு சிவராமனின் மறைவுச் செய்தி கேட்டு அவரது கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. திரு சிவராமனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் கிராமத்தில் காத்திருக்கின்றனர்.
இரு பெண் பிள்ளைகளை வைத்து என்ன செய்யப்போகிறாய் என்று ஊரார் திரு சிவராமனிடம் கேட்டபோதெல்லாம், “நான் உழைத்து, என் பிள்ளைகளைக் கல்வி கற்க வைத்து, என் மூத்த மகளை மருத்துவராகவும் இளைய மகளை மிடுக்கான காவல்துறை அதிகாரியாகவும் ஆக்குவேன்,” என்று பூரிப்புடன் சொல்லி மகிழ்ந்த சிவராமன் இன்று உயிருடன் இல்லை என்றாலும் அவரது கனவை நனவாக்க நாங்கள் இருக்கிறோம் என்று சொன்ன நவீன்குமார், இன்னும் ஓரிரு நாள்களில் திரு சிவராமனின் இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறினார்.

