சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023) உணவங்காடி நிலையக் கடைகளில் உணவு விலை 6.1 விழுக்காடு அதிகரித்ததாக சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மே 6ஆம் தேதி அந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
2012 முதல் 2022 வரை பதிவான சராசரி விலை உயர்வைக் காட்டிலும் இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்வு என்று அந்த ஆய்வு கூறியது.
உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகள், உணவுக்கடைத் தொகுதிகள் போன்றவற்றில் விற்பனையாகும் உணவுகளின் விலை பயனீட்டாளர் விலைக் குறியீட்டைப் பயன்படுத்தி அந்த ஆய்வில் ஒப்பிடப்பட்டது.
1,700 கடைகளில் விற்கப்படும் 100க்கும் மேற்பட்ட உணவுகளின் விலையில் காணப்படும் சராசரி வித்தியாசத்தைப் பயனீட்டாளர் விலைக் குறியீடு மதிப்பிடுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 16 உணவு, பானங்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கையை புள்ளிவிவரத் துறைக் குழுவினர் தயாரித்தனர்.
மலிவு விலைச் சோறு, கோழிச் சோறு, ஃபிஷ்பால் நூடல்ஸ், காப்பி, டீ போன்றவை உணவு விலை அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்கள்.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 கிருமிப்பரவல், ரஷ்யா-உக்ரேன் போர் போன்றவற்றால் உணவு விநியோகச் சங்கிலி சந்தித்த இடையூறுகளால் மூலப் பொருள்களின் விலை உயர்ந்தது.
உணவகங்களிலும் 5.9 விழுக்காடு விலை அதிகரித்ததாகவும் விரைவு உணவு வகைகளின் விலை 7.7 விழுக்காடு அதிகரித்ததாகவும் புள்ளிவிவரத் துறை கூறியது.
மேலும், உணவங்காடி நிலையக் கடைகளில் விற்பனையாகும் பானங்களின் விலை 6.9 விழுக்காடு அதிகரித்தது ஆய்வில் தெரியவந்ததாக அது குறிப்பிட்டது.
காப்பிக் கடைகளிலும் உணவுக்கடைத் தொகுதிகளிலும் நூடல்ஸ், அரிசி உணவுவகைகளின் விலை ஆக அதிக விலையேற்றத்தைச் சந்தித்தன. அவை முறையே 8 விழுக்காடாகவும் 6.5 விழுக்காடாகவும் பதிவாயின.
பருவநிலை மாற்றம், போர் போன்றவற்றால் சமையல் எண்ணெய், கோழி இறைச்சி, சர்க்கரை உள்ளிட்ட மூல உணவுப்பொருள்களின் விலை அதிகரித்ததாகப் பொருளியல் வல்லுநர்கள் கூறினர்.
சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டு, காய்கறி, இறைச்சி, சமையலுக்குப் பயன்படும் எண்ணெய் போன்ற பொருள்கள் ஆக அதிகமாக விலையேற்றம் கண்டதாகக் கூறப்பட்டது.
படிப்படியாக விலையை அதிகரிப்பதற்குப் பதில் ஒரே நேரத்தில் உயர்த்த உணவங்காடி நிலையக் கடைக்காரர்கள் முடிவெடுத்ததால் 2023ல் உணவு விலை உயர்ந்ததாகக் கவனிப்பாளர்கள் கூறினர்.
பயனீட்டுக் கட்டணம், வாடகை, பொருள்,சேவை வரி, மூல உணவுப் பொருள்கள், விநியோகக் கட்டணம், தளவாடக் கட்டணம் எனப் பல்வேறு துறைகளில் கட்டண உயர்வு நிலைப்படக் காத்திருந்து, பின்னர் ஒரே நேரத்தில் கடைக்காரர்கள் உணவு விலையை உயர்த்தியதாகக் கூறப்பட்டது.
2023 பிப்ரவரியில் உச்சமடைந்தபோது 8.3 விழுக்காடாகப் பதிவான உணவங்காடி நிலைய உணவுப் பணவீக்கம் பின்னர் டிசம்பரில் 4.1 விழுக்காடாகக் குறைந்தது.
அந்தக் காலகட்டத்தில் உலகளாவிய நிலையில் எரிசக்தி, உணவுப் பொருள்கள் ஆகியவற்றின் விலை சரிவடைந்ததாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது. அதேவேளையில் அந்நியச் செலாவணியில் சிங்கப்பூர் டாலரின் மதிப்பு உயர்ந்ததாக அமைச்சு கூறியது.
தற்போது உணவங்காடி நிலைய உணவுப் பணவீக்கம் குறைந்திருப்பதாகவும் 2024ல் அது மேலும் குறையக்கூடும் என்றும் அமைச்சு சொன்னது.