தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘உயிர் பிழைத்த எஸ்கியூ321 பயணிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கலாம்’

2 mins read
517c237b-5d32-4c5f-8c2d-b946727f064f
சிங்கப்பூர் திரும்பிய சில எஸ்கியூ321 பயணிகள். - படம்: இபிஏ

உயிர் தப்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஸ்கியூ321 பயணிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்றும் அதிலிருந்து அவர்கள் மீண்டுவர பல மாதங்கள் அல்லது ஆண்டுகளும் ஆகலாம் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

உயிர் பிழைத்த எஸ்கியூ321 பயணிகள் மனதளவில் காயமடைந்துள்ளனர். மே மாதம் 21ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில் பயணி ஒருவர் உயிரிழக்க நேரிட்டது. மாண்டவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இனி சில காலத்துக்குத் தான் விமானத்தில் பயணம் செய்யாமல் இருக்கக்கூடும் என்று எஸ்கியூ321 பயணி ஒருவர் கூறினார். விமானம் ஆட்டங்கண்டபோது பலர் அழுததைக் கேட்டும் ரத்தத்தைப் பார்த்தும் தான் விமானத் தரையில் வாந்தி எடுத்ததாக மற்றொருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் எவ்வாறு எஸ்கியூ321 பயணிகள், ஊழியர்கள், அவர்களின் அன்புக்குரியவர்களை மனதளவில் பாதித்திருக்கக்கூடும் என்பதை அறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சில வல்லுநர்களிடம் பேசியது.

“ஓர் அரிய நிகழ்வைப் பயணிகள் எதிர்கொண்டிருக்கின்றனர். இது, எவருக்கும் மிகப் பெரிய மனவுளைச்சலைத் தரக்கூடியது,” என்றார் மனநலச் சேவைகளை வழங்கும் ‘படிங் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் நிறுவனரான டாக்டர் அமாண்டா ஓ. அந்த அனுபவம், பயணிகளுக்கு மனதளவில் பெரும் இன்னலையும் வலியையும் தரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏஎஸ்டி, பிடிஎஸ்டி போன்ற அதிர்ச்சி சார்ந்த மனநலப் பிரச்சினைகளுக்கு அவர்கள் ஆளாகலாம் என்றும் டாக்டர் ஓ சுட்டினார்.

சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்துக்குப் பிறகும் அதன் நினைவுகள், பாதிக்கப்பட்டோருக்கு வரக்கூடும் என்று அனபெல் சைக்காலஜி மனநல மருந்தகத்தின் தலைமை மனநல ஆலோசகரான டாக்டர் அனபெல் சோவ் தெரிவித்தார்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவலாம் என்றார் டாக்டர் ஓ. அத்தகைய நடவடிக்கைகள் பாதுகாப்பாக இருக்கும் உணர்வை அவர்களுக்கு அதிகரிக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற பல்வேறு வழிமுறைகளை வல்லலுநர்கள் பாதிக்கப்பட்டோருக்குப் பரிந்துரைத்தனர். பாதிக்கப்பட்டோர் இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டுவருவதற்கு ஆகும் காலம் அவரவரைப் பொருத்திருக்கும் என்றும் வல்லுநர்கள் கூறினர்.

பயணத்தின்போது ஒருவர் எந்த அளவு பாதிக்கப்பட்டார் போன்ற அம்சங்களும் அவர் மனதளவில் இயல்புநிலைக்குத் திரும்புவதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ரெசிலியன்ஸ் மருந்தகத்தின் இயக்குநரான டாக்டர் தாமஸ் லீ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்