மின்சாரத்தின் உதவியோடு இயங்கும் மின்சைக்கிள்கள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி இல்லாத சைக்கிள்கள் ஆகியவற்றை நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமையன்று (மே 24) பறிமுதல் செய்தது.
ஏஎம்கே ஹப், வாட்டர்வே பாயிண்ட், சிலேத்தார் மால் ஆகிய கடைத்தொகுதிகளில் தான் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் பதிலளித்தது.
பாதசாரிகளுக்கான பாதைகளில் சம்பந்தப்பட்ட சைக்கிள்களை ஓட்டியது, பதிவுசெய்யப்படாத மின்சைக்கிள்களை வைத்திருந்தது, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி இல்லாத சைக்கிள்களை ஓட்டியது போன்ற குற்றங்களைப் புரிந்த சைக்கிளோட்டிகள் பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.
“தனிநபர் நடமாட்டச் சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அவை சார்ந்த விதிமுறைகள், வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தினமும் தீவு முழுவதும் நிலப் போக்குவரத்து ஆணையம் சோதனை நடத்தி வருகிறது,” என்று ஆணையம் தெரிவித்தது. விதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது வலியுறுத்தியது.
அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு இணங்க நடந்துகொள்ளுமுாறு நிலப் போக்குவரத்து ஆணையம் தனிநபர் நடமாட்டச் சாதனைங்களைப் பயன்படுத்தும் அனைவரையும் கேட்டுக்கொண்டது.

