வேலையிடத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கான அதிகபட்ச அபராதம் ஜூன் மாதத்தில் இருந்து அதிகரிக்க உள்ளது.
$20,000ஆக உள்ள அபராதத் தொகை ஜூன் 1ஆம் தேதி முதல் $50,000க்கு அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், குறைந்தபட்சம் $5 மில்லியன் குத்தகையைப் பெற்ற நிறுவனங்கள், கட்டுமானத் தளங்களில் கண்காணிப்புப் படக்கருவியை அமைக்க வேண்டும் என்பது ஜூன் முதல் கட்டாயமாகிறது.
அபராத அதிகரிப்பு வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் துணைச் சட்டப்பிரிவின்கீழ் எல்லா தொழில்துறைகளுக்கும் பொருந்தும்.
மரணம், கடுமையான காயம் அல்லது வெடிப்புகள் போன்ற ஆபத்தான சம்பவங்களுக்குக் காரணமாக விளங்கும் வேலையிடப் பாதுகாப்புக் குற்றங்களைக் கையாள்கிறது அந்தச் சட்டம்.
ஊழியர்கள் கீழே விழுவதைத் தடுப்பதற்கான கட்டமைப்பை நிறுவத் தவறுவதும் அந்தக் குற்றங்களில் அடங்கும். அதேபோல, வேலையிடப் பாதுகாப்பு தொடர்பான முக்கியக் கடமைகளைச் செய்ய ஆற்றல் நிறைந்தோரை நியமிக்காததும் பாரந்தூக்கிகள், சாரக்கட்டுகள் போன்ற சாதனங்களைச் சோதித்துப் பராமரிக்கத் தவறுவதும் குற்றச்செயல்களாகக் கருதப்படும்.
சிங்கப்பூரின் வேலையிட மரண எண்ணிக்கையும் கடுமையாகக் காயமடைவோரின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு சாதனை அளவாகக் குறைந்த நிலையில் அதிக அபராதம் என்னும் நடவடிக்கை அமலுக்கு வருகிறது.
கொவிட்-19 பெருந்தொற்று வேலைகளைச் சீர்குலைத்த 2020ஆம் ஆண்டின் நிலவரம் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
2022ஆம் ஆண்டு வேலையிட விபத்துகளில் 46 ஊழியர்கள் உயிரிழந்த நிலையில் 2023ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 21.7 விழுக்காடு குறைந்து 36 ஆனது. கடுமையாகக் காயமடைந்தோர் எண்ணிக்கையும் 614லிருந்து 590க்குக் குறைந்தது.
மரணங்களும் கடுமையான காயங்களும் குறைந்திருக்கும் நிலையில் அபராதத்தைக் கடுமையாக்குவதற்கான காரணம் குறித்து மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது திங்கட்கிழமை (மே 27) விளக்கினார்.
“எண்ணிக்கை குறைந்ததுமே திருப்தி அடைந்துவிடக்கூடிய சூழ்நிலையை நாம் விரும்பவில்லை. அதேபோல, ஒருமுறை சாதனை படைத்துவிட்ட அதிசயம் என்று நாம் இருந்துவிடக்கூடாது.
“கடந்த ஆண்டு மரணங்களும் கடுமையான காயங்களும் சாதனை அளவாகக் குறைந்திருந்தாலும் அதற்கு முந்திய ஆண்டில் அவை அதிகமாக இருந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“எனவே, குறைவான சம்பவங்கள் என்பதைக் காலம் காலத்துக்குக் கட்டிக்காக்க விரும்புகிறோம்,” என்றார்.