நடுவானில் ஆட்டங்கண்ட எஸ்கியூ321 விமானத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் சிங்கப்பூர் திரும்பிவிட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (மே 27) பிற்பகல் 4.30 நிலவரப்படி எஸ்கியூ321ல் இருந்த பயணிகளில் 52 பேர் இன்னமும் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் இருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 34 பேரும் அவர்களில் அடங்குவர்.
40 பயணிகளும் ஓர் ஊழியரும் பேங்காக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக ஒருநாள் முன்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்திருந்தது.
“எஸ்கியூ321ல் இருந்த பயணிகளுடனும் ஊழியர்களுடனும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடர்பில் இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார் சிலர் விடுத்த வேண்டுகோளுக்கேற்ப அவர்கள் பேங்காக் செல்வதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துள்ளோம்,” என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சொன்னது. எஸ்கியூ321 நடுவானில் ஆட்டங்கண்ட விவகாரம் குறித்து நடைபெறும் விசாரணையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டது.
“எங்கள் பயணிகள், ஊழியர்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை வழங்குவோம்,” என்றும் அந்நிறுவனம் கூறியது.
மே 21ஆம் தேதியன்று இங்கிலாந்துத் தலைநகர் லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த எஸ்கியூ321 விமானம் மியன்மாரின் இராவாடி பேசின் பகுதிக்கு மேல் பறந்துகொண்டிருந்தபோது நடுவானில் திடீரென பயங்கரமாக ஆட்டங்கண்டது. மாரடைப்புக்கு ஆளானதாக நம்பப்படும் பிரிட்டனைச் சேர்ந்த 73 வயது ஜியோஃப்ரீ கிட்சன் எனும் ஆடவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.

