நிலம்வழி சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் வாகனங்கள் இவ்வாண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் வாகன நுழைவு உரிம (விஇபி) முறையைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும்.
மலேசியாவில் பதிவுசெய்யப்படாத வாகனங்கள் நிலவழி எல்லைகளைக் கடக்கும்போது விஇபி முறையைப் பயன்படுத்த வேண்டும். உட்லண்ட்ஸ் காஸ்வே கடற்பாலம், துவாஸ் இரண்டாம் பாலம் ஆகிய இரண்டு நிலவழி எல்லைகளைக் கடக்கும் வாகனங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.
செவ்வாய்க்கிழமையன்று (மே 28) புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் இந்த விவரங்களை வெளியிட்டார்.
“விஇபி-ஆர்எஃப்ஐடி சின்னங்களுக்கு அடுத்த நான்கு மாதங்களில் பதிவுசெய்து, அவற்றை வாகனங்களில் பொருத்தி, செயல்படுத்துமாறு எல்லா வெளிநாட்டு வாகன உரிமையாளர்களையும் கேட்டுக்கொள்கிறோம்,” என்றும் அவர் கூறினார். விஇபி முறையைப் பயன்படுத்த ஆர்எஃப்ஐடி சின்னம் அவசியமாகும்.
“இரு நாடுகளுக்கும் இடையே வாகனங்களில் பயணம் செய்வோர் அவசர அவசரமாக விஇபி முறைக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்க இந்த நான்கு மாத காலம் கைகொடுக்கும். அவசர அவசரமாக விண்ணப்பிக்கும்போது தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்,” என்றும் அவர் சொன்னதாக தி ஸ்டார் ஊடகம் தெரிவித்தது.
200,000க்கும் அதிகமான வாகன உரிமையாளர்கள் விஇபிக்கு விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும், 70,000 பேர் மட்டுமே விஇபி-ஆர்எஃப்ஐடி சின்னங்களைச் செயல்படுத்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அச்சின்னங்கள் இல்லாத வாகனங்கள் மலேசியாவுக்குள் நுழைவதைத் தடுக்கும் அதிகாரம் அந்நாட்டின் சாலைப் போக்குவரத்துப் பிரிவுக்கு (ஜேபிஜே) உண்டு.
அக்டோபர் ஒன்றாம் தேதிக்குப் பிறகு விஇபி-ஆர்எஃப்ஐடி சின்னத்தைப் பெறாமல் மலேசியாவுக்குள் நுழைவோருக்கு 2,000 ரிங்கிட் (570 வெள்ளி) வரையிலான அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். ஏற்கெனவே மலேசியா சென்று அந்தத் தேதிக்குப் பிறகு தொடர்ந்து அங்கிருப்போருக்கும் இத்தண்டனைகள் பொருந்தும்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவில் போக்குவரத்துக் குற்றங்களை இழைத்து அவற்றுக்குத் தீர்வுகாணாத ஓட்டுநர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கவும் சாலைப் போக்குவரத்துப் பிரிவுக்கு அதிகாரம் உள்ளது என்றும் திரு லோக் குறிப்பிட்டார்.
விஇபி முறைக்கான பதிவுக் கட்டணம் 10 ரிங்கிட்டாகும் (2.90 வெள்ளி).
மோட்டார்சைக்கிள்கள், வர்த்தக வாகனங்கள், அரசாங்க வாகனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களும் விஇபி முறைக்குப் பதிவுசெய்ய வேண்டும்.
ஆனால் அந்த வாகனங்களுக்கான சின்னங்கள் பின்னர்தான் அறிமுகப்படுத்தப்படும்.