குணமாகி வீடு திரும்புவதே விருப்பம்: சிகிச்சை பெறும் எஸ்கியூ321 பயணிகள்

குணமாகி வீடு திரும்புவதே விருப்பம்: சிகிச்சை பெறும் எஸ்கியூ321 பயணிகள்

2 mins read
a5dc30e0-9cb9-421e-89e0-9440c28e97c6
மே 27ஆம் தேதி நிலவரப்படி, எஸ்கியூ321 விமானத்தில் பயணம் செய்த 34 பேர் இன்னும் பேங்காக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் காயமடைந்த சிப்பந்திகள் அனைவரும் சிங்கப்பூர் திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டது. - படங்கள்: ராய்ட்டர்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த எஸ்கியூ321 விமானம் மே 21ஆம் தேதி கடுமையாக ஆட்டங்கண்டதில் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறும் பயணிகள் குணமாகி வீடு திரும்புவதொன்றே தங்கள் விருப்பம் என்று கூறியுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக பேங்காக் மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

மியன்மாரின் ஐராவதி ஆற்றுப்படுகைக்குமேல் பறந்துகொண்டிருந்தபோது காற்றுக் கொந்தளிப்பு ஏற்பட்டதால் அந்த விமானம் கடுமையாக ஆட்டங்கண்டது.

அதில் பயணிகள் பலரும் சிப்பந்திகளும் காயமடைந்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த 64 வயது கேரன் ஆர்ச்சர்க்கு முதுகுத்தண்டு எலும்புகள் மூன்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஐந்து நாள் விடுமுறையில் சிங்கப்பூருக்கு நண்பரைப் பார்க்க அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

கழுத்திலும் முதுகுத்தண்டைச் சுற்றிலும் அணிந்துள்ள பிடிப்புக் கருவிகளை ஜூலை வரை அணிந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகே விமானத்தில் பயணம் செய்ய இயலும் என்றும் மருத்துவர்கள் கூறியதாகத் திருவாட்டி ஆர்ச்சர் கூறினார்.

மலேசியரான இவா கூவின் குடும்பத்தினர் சிலர் இவ்விமான விபத்தில் காயமடைந்துள்ளனர். அவர்களும் வீடு திரும்புவது பற்றியே அதிகம் சிந்திப்பதாகக் கூறப்பட்டது.

சகோதரர், அவரது மனைவி, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்த செய்தி கேட்டு திருவாட்டி கூ கோலாலம்பூரிலிருந்து பேங்காக் சென்றுள்ளார்.

ஓரளவு உடல்நிலை தேறி சாதாரண வார்டுக்கு மாறினாலும் விமானப் பயணம் அவர்களுக்குத் திகிலூட்டுவதாக அவர் கூறினார்.

எஸ்கியூ321 விமானம் கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்குமேல் குலுங்கியதில் இருக்கைவார் அணியாத பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.

உணவு, பயணப்பைகள் போன்றவையும் விமானத்தினுள் சிதறின. பலருக்கும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன.

உணவு பரிமாறிகொண்டிருந்ததால் சிப்பந்திகளில் சிலர் மீது சூடான பானங்கள் பட்டுக் காயமேற்பட்டது.

சம்பவத்தில் பிரிட்டனைச் சேர்ந்த ஜெஃப் கிச்சன் எனும் 73 வயது ஆடவர் உயிரிழந்தார். விமானம் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் அவசரமாகத் தரையிறங்கியது.

அதன் பிறகு காயமடைந்தவர்கள் பேங்காக் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பலருக்கும் முதுகுத்தண்டு, மூளை, மண்டையோடு போன்றவற்றில் காயமேற்பட்டது.

சிப்பந்தி ஒருவருக்கு தலையும் முதுகும் பாதிக்கப்பட்டதால் முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மலேசியாவைச் சேர்ந்த திருவாட்டி கூவின் சகோதரர் மனைவி கர்ப்பிணி என்றும் அவருக்கு முதுகுத்தண்டில் எலும்புமுறிவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

அந்த விமானத்தில் பயணம் செய்த 211 பேரில் 41 பேர் சிங்கப்பூரர்கள். மற்ற 170 பேர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, பிரிட்டன் உட்பட 16 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.

மாற்று விமானம் மூலம் பயணிகளில் பெரும்பாலானோர் சிங்கப்பூர் வந்தடைந்தனர்.

மே 27ஆம் தேதி நிலவரப்படி, எஸ்கியூ321 விமானத்தில் பயணம் செய்த 34 பேர் இன்னும் பேங்காக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் காயமடைந்த சிப்பந்திகள் அனைவரும் சிங்கப்பூர் திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
எஸ்கியூ321லண்டன்சிங்கப்பூர்பேங்காக்