சுய தீவிரவாத சித்தாந்தத்தின்பால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஈர்க்கப்பட்ட 12 இளம் சிங்கப்பூரர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்; 20 வயதுக்கு உட்பட்ட அவர்கள் அனைவரும் இணையத்தின்வழி தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்கள்.
அந்த 12 பேரில் 16 வயது இளையர் ஒருவர், சிங்கப்பூரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இரு முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் மொத்தம் 38 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். அந்த எண்ணிக்கையில் 20 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கையான 12, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும்.
ஒப்புநோக்க 2015ஆம் ஆண்டுக்கு முன்பு ஓர் இளையர் மட்டுமே தாமாக தீவிரவாத சித்தாந்தத்துக்கு ஈர்க்கப்பட்டார் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் புதன்கிழமையன்று (மே 29) தெரிவித்தார். இந்தப் போக்கு கவலை தரும் ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
“வருங்காலத்தில் இன்னும் வயது குறைந்தவர்கள் தீவிரவாத சித்தாந்தத்துக்கு ஈர்க்கப்படும் சூழலை எதிர்நோக்கலாம்,” என்று திரு டியோ கூறினார். மே மாதம் 17ஆம் தேதியன்று மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள உலு திராம் காவல்நிலையத்தில் நிகழ்ந்த தாக்குதலை மேற்கோள்காட்டிப் பேசிய திரு டியோ, ஜமா இஸ்லாமியா போன்ற பயங்கரவாத அமைப்புகளால் இந்த வட்டாரத்தில் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருவதாகச் சுட்டினார்.
ஆண்டுதோறும் நடைபெறும் சமய மறுவாழ்வுக் குழுவின் சந்திப்பில் உரையாற்றியபோது தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ, இந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்டார். சமய மறுவாழ்வுக் குழு, தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டோருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் மனநல ஆலோசனை வழங்கும் தொண்டூழியத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய சமயக் கல்வி ஆசிரியர்களைக் கொண்டது.

