சீர்திருத்தக் கட்சித் தலைவர் கென்னத் ஜெயரத்னத்திற்கு, பொஃப்மா எனப்படும் இணையத்தில் வேண்டுமென்றே பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கு எதிரான சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமரும் சட்ட அமைச்சரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையை மாற்றியமைக்க முடியும் என்று திரு ஜெயரத்னம் வெளியிட்ட கருத்துக்கு எதிராக அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், மே 29ஆம் தேதி அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
திரு லீ சியன் யாங் மீது உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகமும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் தொடுத்த அவதூறு வழக்குகள் குறித்துத் திரு ஜெயரத்னம், மே 25ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் தம்பியும் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் இளைய மகனுமான திரு லீ சியன் யாங், அமைச்சர்கள் ரிடவுட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு எடுத்தது குறித்து அவதூறான கருத்தை வெளியிட்டதாக உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அமைச்சர்களுக்குத் தலா $200,000 செலுத்தும்படியும் திரு லீ சியன் யாங்குக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதன் தொடர்பில் மே 25ஆம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் திரு ஜெயரத்னம், சட்ட அமைச்சர் சண்முகமும் பிரதமரும் உயர் நீதிமன்ற நீதிபதியின் நியமனம், பதவி உயர்வு, போனஸ் போன்றவற்றில் தலையிட்டிருக்கக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது உண்மையன்று என்று கூறிய சட்ட அமைச்சு, திரு ஜெயரத்னத்திற்கு பொஃப்மா திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறியது.
அவர் தமது பதிவில் ‘பொய்யான தகவல்’ என்ற குறிப்பையும் அரசாங்கம் இதைத் தெளிவுபடுத்த அளித்த விளக்கத்துக்கான இணையத் தொடர்பு முகவரியையும் சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.