‘டிபிஎஸ்’ பியுஷ் குப்தாவுக்குமேலும் ஒரு புதிய பொறுப்பு

‘டிபிஎஸ்’ பியுஷ் குப்தாவுக்குமேலும் ஒரு புதிய பொறுப்பு

2 mins read
08349784-487d-4ab2-a5c4-5d1168994cf4
டிபிஎஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான பியூஷ் குப்தா மற்றொரு புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டிபிஎஸ் குழுமத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பியுஷ் குப்தாவுக்கு மேலும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மண்டாய் பார்க் ஹோல்டிங்ஸ் இயக்குநர் சபையின் புதிய தலைவராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜூன் 1ஆம் தேதி அவர் புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று மண்டாய் வைல்ட்லைஃப் குருப் வெள்ளிக்கிழமை (மே 31) அன்று தெரிவித்தது.

புதிய நியமனத்துக்குப் பிறகு கருத்துரைத்த திரு குப்தா, பருவநிலை மாற்றத்துடன், இயற்கை மற்றும் பல்லுயிர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு போன்றவை பூவுலகை எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

சவால்களை எதிர்கொள்வதில் கடப்பாடு கொண்டிருப்பதால் புதிய நியமனத்தை ஏற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் இயற்கை சார்ந்த சிறந்த இடமாக அதன் பெருமையை உயர்த்த விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2023 நவம்பர் 16ஆம் தேதியிலிருந்து அப்பதவியில் இருந்த சோங் சியாக் சிங் என்பவரிடமிருந்து திரு குப்தா புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

சோங், துணைத் தலைவராக இருப்பார் என்று குழுமம் கூறியது.

2023 நவம்பர் 16 முதல் மண்டாய் பார்க் ஹோல்டிங்சின் கௌரவ தலைவராக உள்ள எஸ். தனபாலன் தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இரண்டு புதிய இயக்குநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2024 மார்ச் 31ஆம் தேதி பெக் சியோக் லான் இயக்குநர்களில் ஒருவராக நியமனம் பெற்றுள்ளார். லிம் பெங் சீ இவ்வாண்டு ஏப்ரல் 8ஆம் தேதி இயக்குநர் சபையில் இணைந்தார்.

சிங்கப்பூரின் வனவிலங்கு பூங்காக்களான பறவை பூங்கா, நைட் சஃபாரி, ரிவர் வொண்டர்ஸ், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் ஆகியவற்றை நிர்வகிக்கும் மண்டாய் வைல்ட்லைஃப் குழுமம், மண்டாய் பார்க் ஹோல்டிங்ஸ்கீழ் செயல்படும் நிறுவனமாகும்.

குறிப்புச் சொற்கள்