அமெரிக்க - சீன தற்காப்புத் தலைவர்கள் அரிதான நேரடிப் பேச்சு வார்த்தையை சிங்கப்பூரில் நடத்தியுள்ளனர்.
இருநாட்டு தற்காப்பு அமைச்சர்களும் நேருக்கு நேர் சந்திப்பது 18 மாதங்களில் இது முதல் முறை.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் புவிசார் அரசியல் பதற்றம் ஏற்பட காரணமான, தைவான் அருகே சீனாவின் ராணுவ நடவடிக்கைக்கு சில நாள்களுக்குப் பிறகு இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், ஐந்து மாதங்களுக்கு முன்னர் சீனத் தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட டோங் ஜுன் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு (மே 31) தொடங்கும் ஷங்ரிலா மாநாட்டுக்கு முன்னதாக, ஷங்ரிலா ஹோட்டலில் பிற்பகல் 12.50 மணிக்குச் சந்தித்தனர்.
தைவான் விவகாரம் உள்ளிட்ட பதற்றமான பிரச்சினைகள் தொடர்பான சர்ச்சைகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுக்க உதவும் ராணுவ உரையாடல்களுக்கான நம்பிக்கையை சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த பேச்சை முடித்துக்கொண்டு இருவரும் பிற்பகல் 2 மணிக்கு தனித்தனியாக சந்திப்பு நடந்த அறையை விட்டு வெளியேறினர்.
“நேர்மறையான, யதார்த்தமான, ஆக்கபூர்வமான” பேச்சு வார்த்தை என்று சீன தற்காப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இரு தலைவர்களும் தைவான், ரஷ்யா- உக்ரேன் போர், காஸா மோதல்கள் குறித்து விவாதித்தனர்.
தைவான் அருகே தொடர்ந்து இடம்பெறும் சீன ராணுவ நடவடிக்கை குறித்து ஆஸ்டின் கவலை தெரிவித்ததாக அமெரிக்க விமானப்படை மேஜர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“தைவான் நீரிணையைச் சுற்றிய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சீன ராணுவத்தின் செயல்பாடு குறித்து தற்காப்பு அமைச்சர் கவலை தெரிவித்தார். மேலும் சாதாரண, வழக்கமான ஜனநாயக செயல்முறையின் ஒரு பகுதியான தைவானின் அரசியல் மாற்றத்தை கட்டாய நடவடிக்கைகளுக்கான ஒரு சாக்காக சீனா பயன்படுத்தக்கூடாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்,” என்று ரைடர் 75 நிமிட சந்திப்புக்குப் பிறகு கூறினார்.
தைவான் உடனான சீனாவின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று டோங் ஆஸ்டினை எச்சரித்தார் என்று சீனத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் வூ கியான் செய்தியாளர்களிடம் கூறினார். தைவான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகள் “ஒரே சீனா” கொள்கையை தீவிரமாக மீறுவதாக இந்தச் சந்திப்பின்போது டோங் கூறினார்.
தைவான் குறித்த அமெரிக்காவின் அணுகுமுறை அமெரிக்கா அளித்த உறுதிமொழிகளை மீறுவதுடன், தைவானில் உள்ள “பிரிவினைவாத சக்திகளுக்கு” தவறான சமிக்ஞையை அனுப்புகிறது என்று அவர் டோங்கை மேற்கோள் காட்டி கூறினார். பெய்ஜிங் லாயை “பிரிவினைவாதி” என்று அழைக்கிறது.
எனினும், இரு தரப்பினரும் ராணுவ உறவுகளை வெளிப்படையாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
இருவரும் ஏப்ரல் மாதம் தொலைபேசியில் பேசினர். அப்போது தென்சீனக் கடல் பகுதி, தைவான் நீரிணை உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 2023 நவம்பர் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் ராணுவத் தொடர்பை மீண்டும் தொடங்க மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மே 31 ஆம் தேதி சிங்கப்பூர் சந்திப்பு இடம்பெற்றது.
கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றதால் இரு நாடுகளுக்கிடையிலான ராணுவத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
தேவையற்ற மோதல்களைத் தடுக்க மூத்த ராணுவத் தலைவர்களுக்கிடையிலான தொடர்பின் அவசியத்தை இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
சந்திப்பைத் தொடர்ந்து இவ்வாண்டு இறுதிக்குள் சீனாவுடன் நெருக்கடிநிலை தொடர்பு குறித்த பணிக்குழு ஒன்றைக் கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா உதவக்கூடும் என்றும் சீனத் தற்காப்புத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மைய ஆண்டுகளில் அமெரிக்க - சீனா உறவுகளின் அளவுகோலாக மாறியுள்ள இந்த வருடாந்திர கலந்துரையாடலில் உலகெங்கிலும் உள்ள தற்காப்பு அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

