இணையக் குற்றவாளிகள் பல பில்லியன் டாலரைத் திருட உதவும் ஊடுருவப்பட்ட கணினிக் கட்டமைப்புக்கான தீங்குநிரலை உருவாக்கி, சேவை வழங்கியதற்காகக் கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நீதித் துறை வழிநடத்திய பன்னாட்டு அதிகார வரம்பு நடவடிக்கையின்போது வாங் யுன்ஹ என்ற அந்த ஆடவர் மே 24ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
மே 31ஆம் தேதி, அரசு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது வெளிநாட்டு அதிகாரிகளிடம் சரணடைய விருப்பமா என்று மூத்த மாவட்ட நீதிபதி ஓங் ஹியன் சன் அவரிடம் கேட்டார்.
முன்னதாக, கைது செய்யப்பட்ட பிறகு வாங்கை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்படி வாஷிங்டன் கோரியிருப்பதாகக் காவல்துறை கூறியது. அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே கைதி பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் நடப்பில் உள்ளது.
இந்நிலையில், வாங் தான் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர் கூறினார்.
நாடு கடத்தப்படுவதற்கு ஒப்புக்கொள்ளலாம் என்றும் அவ்வாறு செய்தால் விசாரணையைத் தவிர்க்கலாம் என்பது பற்றியும் வாங் அறிவாரா என்று வழக்கறிஞர் இங்கிடம் நீதிபதி கேட்டார். அதற்கு, இதுகுறித்து வாங்கிடம் பேசுவதாக வழக்கறிஞர் இங் கூறினார்.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைதி பரிமாற்றம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்கீழ், குற்றவாளிகள் நாடு கடத்தப்படுவதற்கு ஒப்புதல் தெரிவிக்கலாம்.
அனைத்துலக நடைமுறைகளுக்குப் பொருந்தும் இந்தத் திருத்தம், குற்றவாளி தேவைக்கு மேலும் சிங்கப்பூரில் தடுத்து வைக்கப்படுவதைத் தடுக்கவும் நாட்டின் வளங்களைச் சேமிக்கவும் உதவும்.
தொடர்புடைய செய்திகள்
விசாரணையின் முடிவில் வாங்கை மேலும் ஏழு நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்க அரசுத் தரப்பு முன்வைத்த கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
அவரது வழக்கு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.