தோட்டக்கலை, இயற்கை மீது ஆர்வமுள்ள சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு நற்செய்தியாக பசுமைசார்ந்த 5,000 சதுர மீட்டர் பரப்பளவில் நகர்ப்புற பண்ணைத் திறக்கப்பட்டுள்ளது.
தேசிய பூங்காக் கழகம், சமூக நிறுவனமான சிட்டி ஸ்பிரவுட்ஸ் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பு மூலம் சிட்டி ஸ்பிரவுட்ஸ்@வெஸ்ட் கோஸ்ட் எனும் அந்தப் பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.
வேளாண் மற்றும் இயற்கை சார்ந்த நடவடிக்கைகளுக்கு 33 பசுமை இல்லங்கள் இதில் உள்ளன. 41 தோட்டங்களுக்கான இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் தோட்டத்திற்கான இடத்தை வாடகைக்கு எடுத்து தோட்டக்கலையில் ஈடுபடலாம். அது மட்டுமல்லாமல் குழந்தைகள் விளையாடுமிடம், காப்பிக் கடை போன்றவையும் இங்கு இடம்பெற்றுள்ளன.
வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் கார்ப்பேட்டை 2க்கு அருகே சமூக நகர்ப்புற பூங்கா அமைந்துள்ளது.
சமூக நிறுவனத்துடன் சேர்ந்து இப்படியொரு பண்ணையை அமைப்பது இதுவே முதல் முறை என்று தேசிய பூங்காக் கழகம் சனிக்கிழமை (ஜூன் 1) அன்று தெரிவித்தது.
புதிய பண்ணையின் பரப்பளவு, மூன்றில் இரண்டு மடங்கு ஒரு காற்பந்துத் திடலுக்கு ஈடாகும்.
சிங்கப்பூரில் அதிகம் பயன்படுத்தப்படாத இடங்களை சமூகத்திற்கான பண்ணைகளாக மாற்றுவது ‘சிட்டி ஸ்பிரவுட்ஸ்’சின் நோக்கம் என்று அதனை நிறுவிய ஸாக் டோ தெரிவித்தார்.
சுற்று வட்டார குடிமக்களுக்கு நகர்ப்புற பண்ணை சிறு வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
தோட்டத்திற்கான இடங்களை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் go.gov.sg/citysproutsatwestcoast என்ற இணையத் தளத்தில் விவரங்களை அறியலாம்.
சிங்கப்பூர் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வெஸ்ட் கோஸ்ட் பூங்கா கருப்பொருள் அடையாளங்களுடன் தனித்துவமான அம்சங்களுடன் மேம்படுத்தப்படும் என்று ஜூன் 1ஆம் தேதி நகர்ப்புற பண்ணை திறப்பு விழாவில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ குறிப்பிட்டார்.
மேலும் சிங்கப்பூரின் தென்மேற்கில் உள்ள 13 பூங்காக்களையும் தொடரும் நடை பாதைகள், மரபுடமைப் பாதைகள் போன்றவற்றால் இணைக்கும் திட்டமும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

