வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம் சார்பில் குடியிருப்பாளர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையையும் பிணைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் ‘ஹெல்த்தி லிவிங் ஃபெஸ்டிவெல்’, ஈசூன் வட்டார விளையாட்டு நிலையத்தில் நடைபெற்றது.
ஜூன் 1, 2 ஆகிய இரு நாள்களில் நடைபெற்ற இவ்விழா, குழந்தை முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில் பல்வேறு விளையாட்டுகளுடன் களைகட்டியது.
முதல் நாள் 100 பேர் கலந்துகொண்ட 9 கிலோ மீட்டர் தொடர் ஓட்டம், இரண்டாவது நாள் வடமேற்கு நடைப்பயிற்சி மன்றத்தைச் சேர்ந்த 2,000 பேர் கலந்துகொண்ட 1.7 கிலோமீட்டர் நடைப்பயிற்சி, பூப்பந்து, கூடைப்பந்து போட்டிகள் உள்ளிட்ட 30 விதமான நிகழ்வுகளில் தீவெங்கும் இருந்து ஏறத்தாழ 6,000 பேர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து இரண்டாமாண்டாக நடைபெறும் இவ்விழாவில் வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அவ்வப்போது சிறு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது பங்கேற்பாளர்களை மகிழ்வூட்டியது. குடும்பமாகக் கலந்துகொள்ளும் ‘ஃபேமிலி டெலிமேட்ச்’, ஏறத்தாழ மறந்துபோகும் நிலையிலுள்ள ஏழாங்கல், பாண்டி உள்ளிட்ட சிறுவயது விளையாட்டு ஆகியவற்றில் குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
ஈசூன் வட்டாரத்தில் வசிக்கும் தொழில்நுட்பத் துறை ஊழியரான நந்தகுமார், 34, இந்நிகழ்வில் தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமி, 32, சகோதரர்கள் ராஜு,43, ரமேஷ்,38, அவரின் மகள் ஜனுஸ்ரீ, 5, என குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்ற இவர்கள், இந்த வட்டாரமே உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுவதாகத் தெரிவித்தனர். தங்கள் விடுமுறை நாளைப் பலருடன் கழித்த உணர்வு ஏற்பட்டதாகவும் கூறினர்.
மேலும், வயதானவரும் சிரிப்புடன் கலகலப்பாக விளையாடிக் கழிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருப்பதாகப் புன்னகையுடன் பகிர்ந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பொழுதுபோக்கிற்காக அவ்வப்போது பூப்பந்து விளையாடி வரும் நிலையில், முதன்முறையாக ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் அனுபவத்தை பெற்றதாகத் தெரிவித்தனர் பூப்பந்துப் போட்டியில் பங்கேற்ற 18 வயது பல்துறைக் கல்லூரி மாணவர்கள் மார்க் ஆண்ட்ரூ, அன்ஃபல் ஷாகிர்.
தொடர்ந்து பத்தாண்டுகளாக வாரந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திரா நவதாஸ், 60 தனது நடைப்பயிற்சி தோழிகளுடன் இணைந்து இந்நிகழ்வில் பங்கேற்றார். வயதாகிவரும் நிலையில் தன்னை வீட்டில் முடக்காமல் சுறுசுறுப்பாக வைத்திருப்பது நடை, உடற்பயிற்சி ஆகியவைதான் என்றார்.
“இவ்வாறு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது உடல்நலத்தை உறுதி செய்வதுடன், பலவகையான மக்களைச் சந்தித்துப் பேசிப் பழக ஒரு வாய்ப்பாக அமைகிறது. இது என் மன நலனுக்கும் வழிவகுக்கிறது,” என்றார் பீஷான் பகுதியைச் சேர்ந்த இந்திரா.
இவ்விழாவில் சிறுவர்களுக்கான சில விளையாட்டுகளை முன்னின்று நடத்தினார் ‘ஆக்டிவ்எஸ்ஜி’ தொண்டூழியர் அஞ்சன் குமார், 50. முழுநேரம் கணினி முன்னரே செலவிடும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது தொண்டூழியம் செய்வது பொழுதுபோக்காக இருப்பதாகச் சொன்னார். இயல்பாகவே உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட இவர், நாள் முழுதும் இந்த விளையாட்டுகளை நடத்தியது உடற்பயிற்சியாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.
வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றத் தொண்டூழியரும் உயர்நிலைப்பள்ளி மாணவருமான லோகன் இரமேஷ், 14, பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி முத்திரை பெற்றவர்களுக்குப் பரிசுப் பை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். பரபரப்பாகச் செயல்பட்ட இவர், பலவகை மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களது ஆர்வத்தைக் காண்பதும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார்.