சிங்கப்பூரும் லித்துவேனியாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தக, முதலீட்டு உறவுகளை மேலும் உயர்த்த தொழில்துறை அம்சங்களில் இணைந்து பணியாற்ற முன்வந்து உள்ளன.
மின்னிலக்கத் தொழில்நுட்பம், நவீன தயாரிப்பு முறை, தொழில்நுட்பம் ஆகியன அந்த அம்சங்களில் சில என்று மனிதவள அமைச்சரும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டான் சீ லெங் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 31) நடைபெற்ற லித்துவேனிய-சிங்கப்பூர் வர்த்தகக் கருத்தரங்கில் கலந்துகொண்டு திரு டான் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “மீள்திறன் நன்மதிப்புகள், படைப்பாற்றல், வெளிப்படையான-விதிகள் அடிப்படையிலான வர்த்தகம் ஆகியவற்றோடு இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான பொருளியல் உறவுகளும் ஐரோப்பிய ஒன்றிய-சிங்கப்பூர் தாராள வர்த்தக உடன்பாட்டில் இடம்பெற்று உள்ளன,” என்றார்.
“அந்த உடன்பாடு கடந்த 2019ஆம் ஆண்டு நடப்புக்கு வந்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு சேவை வர்த்தகம் 2022ஆம் ஆண்டில் ஏறத்தாழ மூன்றில் இருமடங்கு அதிகரித்து US$150 (S$202 மில்லியன்) மில்லியனைத் தொட்டது.
“நமது வர்த்தக, முதலீட்டுத் தொடர்புகள் வலுவாக வளர்ந்து உள்ளது, நமது சந்தைகளிலும் வட்டாரங்களிலும் குறிப்பிடத்தக்க வர்த்தக வாய்ப்புகள் இருப்பதை உணர்த்துகின்றன,” என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.
“தென்கிழக்கு ஆசியாவிலும் பெரும் ஆசிய-பசிபிக் வட்டாரத்திலும் உள்ள பொருளியல் வாய்ப்புகளைப் பெற லித்துவேனிய வர்த்தகங்கள் சிங்கப்பூரின் வலுவான வர்த்தக, போக்குவரத்துத் தொடர்புத்திறன்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
“அதேபோல சிங்கப்பூர் வர்த்தகங்களும் லித்துவேனியாவில் முதலீடு செய்யலாம்.
தொடர்புடைய செய்திகள்
“ஏறத்தாழ 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட லித்துவேனியா US$80 பில்லியன் பொருளியலைக் கொண்டது. அந்நாட்டின் தலைநகர் வில்னியஸ் தொழில் தொடங்குவோருக்கும் தொழில்முனைவோருக்கும் ஏற்ற துடிப்புள்ள மையமாக விளங்குகிறது.
“அதன் ஆதரவுடன் வலுவடைந்து இருக்கும் தகவல் தொழில்நுட்பம், உயிர்தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சிங்கப்பூர் வர்த்தகங்கள் முதலீடு செய்ய முடியும்,” என்று டாக்டர் டான் தெரிவித்தார்.
கருத்தரங்கில் உரையாற்றிய லித்துவேனியக் குடியரசின் பிரதமர் திருவாட்டி இங்கிரிடா சைமோனைட், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, புத்தாக்கம், தொழில் தொடங்க துடிப்பான சூழல் ஆகியவற்றில் முதலீடுகளைப் பெருக்குவதே தமது அரசாங்கத்தின் தலையாக முன்னுரிமை என்றார்.
தற்போது லித்துவேனியாவில் ஏறக்குறைய 1,000 தொழில்தொடங்குநர்கள் உள்ளனர். அவர்களின் நிறுவனங்கள் மென்பொருள், நிதித் தொழில்நுட்பம், வாழ்க்கை அறிவியல் போன்றவற்றில் முக்கியமாகக் கவனம் செலுத்துகின்றன.
லித்துவேனியாவில் உள்ள சிங்கப்பூர் வணிகங்களிலிருந்துகூட இந்த மூன்று துறைகளும் அதிக ஆர்வத்தை ஈர்க்கின்றன.

