நகர்ப்புற சவால்களைச் சமாளிக்க லீ குவான் யூ பரிசு வென்ற நகரங்கள் அடங்கிய புதிய கட்டமைப்பு

நகர்ப்புற சவால்களைச் சமாளிக்க லீ குவான் யூ பரிசு வென்ற நகரங்கள் அடங்கிய புதிய கட்டமைப்பு

2 mins read
98c69ea1-dc47-4552-b790-e8d186632413
தேசிய வளர்ச்சிய அமைச்சர் டெஸ்மண்ட் லீ உலக நகரங்களின் உச்சநிலைக்கூட்டம் 2024ல் பங்கேற்று உரையாற்றினார். - படம்: எஸ்பிஎச் மீடியா
multi-img1 of 2

நகர்ப்புறச் சவால்கள் பற்றி விவாதிக்க அரசாங்க அதிகாரிகளையும் கல்வியாளர்களையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்ல புதிய கட்டமைப்பு ஒன்று சிங்கப்பூரில் தொடங்கப்பட்டு உள்ளது.

லீ குவான் யூ உலக நகர பரிசு வென்ற நகரங்களை உள்ளடக்கிய ‘த சிட்டி நெட்வொர்க்’ என்னும் அந்தக் கட்டமைப்பு நகரங்களுக்கு இடையிலான பங்காளித்துவத்தை பேணும்.

மேலும் அறிவாற்றலை பகிர்ந்துகொள்ளவும் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் அவற்றுக்கு அந்தக் கட்டமைப்பு வழிசெய்யும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (ஜூன் 3) நடைபெற்ற உலக நகரங்களின் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார்.

வாழத்தகுந்த நகரங்களுக்கான மையமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் இணைந்து அந்தக் கட்டமைப்பைத் தோற்றுவித்து உள்ளன.

லீ குவான் யூ உலக நகர பரிசை வென்ற ஏழு நகரங்கள் அந்தக் கட்டமைப்பில் இடம்பெற்று உள்ளன.

ஸ்பெயினில் உள்ள பில்பாவோ, சீனாவின் சுஸாவ், ஆஸ்திரியாவின் வியன்னா, மெக்சிகோ நகரம் ஆகியன உள்ளிட்ட நகரங்களும் அந்த நகரங்களில் உள்ள அமைப்புகளும் அதில் அடங்கும்.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் அந்தப் பரிசு துடிப்பு, வாழத்தகுந்த சூழல், நீடித்து நிலைத்திருக்கக்கூடிய நகர சமூகங்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் தலைசிறந்து விளங்கும் நகரங்களுக்கு வழங்கப்படுகிறது.

கட்டமைப்பில் இணையுமாறு, அந்தப் பரிசின்கீழ் சிறப்புக் குறிப்புகளைக் கொண்ட மேலும் 20 நகரங்களுக்கு, வாழத் தகுந்த நகரங்களுக்கான மையமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் அழைப்பு விடுத்து உள்ளன.

கட்டமைப்பில் இடம்பெறும் நகரங்கள் நகரப்புற சவால்களுக்கான தீர்வுகளை அடையாளம் காண்பதுடன் சவால்கள் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைப்பதிலும் அந்நகரங்கள் ஈடுபடும் என்று அவ்விரு அமைப்புகளும் கூறின.

ஆராய்ச்சித் திட்டங்களின் முடிவுகள் அடுத்தடுத்து நிகழ இருக்கும் உலக நகரங்களின் உச்சநிலைக் கூட்டங்களில் பகிர்ந்துகொள்ளப்படும்.

சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தில் நிகழ்ந்த உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திரு டெஸ்மண்ட் லீ, நீடித்து நிலைக்கக்கூடிய நகர்ப்புற மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய திட்டங்களில் ஈடுபட்டு உள்ள நகரங்களுடன் சிங்கப்பூரும் இணைந்து பணியாற்றும் என்றார்.

தரமான, கட்டுப்படியாகக்கூடிய வீடமைப்புக்கான அணுகுமுறைகளை வெளியிடுவதிலும் சிங்கப்பூர் கைகோத்துச் செயல்படும் என்றும் திரு லீ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்