‘பெரிய அளவில் தரவு நிலையங்களுக்கான முதலீடுகளை சிங்கப்பூர் ஈர்க்கும் சாத்தியம் குறைவு’

2 mins read
39b03525-b784-488c-987c-530df4c58afa
சிங்கப்பூரில் உள்ள ஒரு தரவு நிலையம். - படம்: இக்குவினிக்ஸ்

சிங்கப்பூர், தரவு நிலையங்களுக்காகப் பெரிய அளவில் வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக சாத்தியம் குறைவு என்று பிஎம்ஐ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

கூடுதல் தரவு நிலையங்களுக்கான கொள்ளளவை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக சிங்கப்பூர் அண்மையில் அறிவித்திருந்தது. அப்படியிருந்தும் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

திங்கட்கிழமையன்று (ஜூன் 3) அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. பிஎம்ஐ, ஃபிட்ச் சலீயூ‌ஷன்‌ஷ் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.

தென்கிழக்காசியாவில் இருக்கும் தரவு நிலையங்களுக்கான தரவு சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய சிங்கப்பூரின் கொள்ளளவு போதாது என்பது இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூரைத் தாண்டியும் தரவு நிலைய முதலீடுகள் தொடர்பில் நிலவரம் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக மலேசியாவில் இந்நிலை உருவாகியுள்ளது.

குறுகிய காலத்தில் கூடுதலாக 300 மெகாவாட் கொள்ளளவை வழங்கத் திட்டமிட்டிருப்பதாக சிங்கப்பூர் அண்மையில் அறிவித்திருந்தது. அதோடு, பசுமை எரிசக்திப் பயன்பாட்டுக்காக மேலும் 200 மெகாவாட் கொள்ளளவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் தெரிவித்தது.

நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட தரவு நிலையங்களை உருவாக்குவதற்கான திட்டத்தைத் தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டிருந்தது. அதற்கு இணங்க இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் ஆக்ககரமான முறையில் எரிசக்தியைப் பயன்படுத்துவது போன்றவற்றுக்காக இத்துறையை ஒன்றுபட்டு செயல்பட ஊக்குவிக்கப் புத்தாக்கத்தை விதைப்பது கூடுதலாக 300 மெகாவாட் கொள்ளளவை வழங்குவதன் நோக்கம் என்று தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பிஸ்னஸ் டைம்ஸ் ஊடகத்தின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

2019ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் தரவு நிலையங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் தரவு நிலையங்கள் விரைவில் மற்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கு இடம் மாற நேரிட்டது.

குறிப்பாக மலேசியாவின் ஜோகூர், இந்தோனீசியாவின் பாத்தாம் ஆதியவற்றுக்குத் தரவு நிலையங்கள் இடம் மாறின.

குறிப்புச் சொற்கள்