நெபிராஸ்கா: அமெரிக்காவின் நெபிராஸ்கா மாநிலத்தில் உள்ள தாதியர் இல்லத்தில் மாது ஒருவர் திங்கள்கிழமை (ஜூன் 3ஆம் தேதி) அன்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பின்னர் அந்த மாது இறுதிச் சடங்கு நடத்தும் நிறுவனப் பணியாளர் ஒருவரால் உயிருடன் இருப்பதாக தெரியவந்தததாக அதிகாரிகள் கூறினர்.
கான்ஸ்டன்ஸ் கிளாண்ட்ஸ் என்ற நெபிராஸ்கா மாநிலத்தின் லிங்கன் நகரைச் சேர்ந்த அந்த 74 வயது மாது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது உயிருடன் இருந்ததாக கூறப்பட்டது. இதை லாங்கஸ்டர் கவுண்டி ஷெரிஃப் அலுவலகத் துணைத் தலைவர் பென் ஹவ்சின் திங்கள்கிழமை (ஜூன் 3) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“தற்போதைய நிலையில் தாதியர் இல்லம் மீது குற்ற நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், விசாரணை தொடர்கிறது,” என்று திரு பென் ஹவ்சின் விளக்கினார்.
நெபிராஸ்கா தாதியர் இல்லத்தில் திருவாட்டி கிளாண்ட்ஸ் நீண்டநாள் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில், அவர் காலை 9.44 மணிக்கு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது என்று திரு பென் ஹவ்சின் கூறினார். அப்பொழுது ஷெரிஃப் அலுவலக மரண விசாரணை அதிகாரி விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று அவர் விளக்கினார்.
இந்நிலையில், லிங்கன் நகரில் இறுதிச் சடங்கு சேவை வழங்கும் ‘புத்தெரஸ்-மேசர் அண்ட் லவ் ஃபியூனரல் ஹோம்’ என்ற நிறுவனம் இறந்துவிட்டதாக நம்பப்படும் ஒருவரை தாதியர் இல்லத்திலிருந்து கொண்டு சென்றதாக திரு பென் ஹவ்சின் தெரிவித்தார்.
ஆனால், திருவாட்டி கிளாண்ட்சின் உடலை இறுதிச் சடங்குக்கு தயார் செய்த ஊழியர் ஒருவர் இறந்ததாக நம்பப்படுபவரிடம் உயிர்மூச்சு இருந்ததைக் கண்டார். அந்த மாது இறந்ததாக அறிவிக்கப்பட்டு இரண்டு மணிநேரம் கழித்து இறுதிச்சடங்கு நடத்தும் நிறுவனம் மருத்துவ அவசர வாகனத்தை அழைத்ததாகவும் திரு பென் ஹவ்சின் கூறினார்.
பின்னர் அந்த நிறுவனம் திருவாட்டி கிளாண்ட்சுக்கு இதய செயலாக்க சிகிச்சை அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவசர மருத்துவ வாகன ஊழியர்கள் திருவாட்டி கிளாண்ட்சுக்கு அவசர சிகிச்சை அளித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.