துபாய்: எஸ்கியூ321 விமானம் மோசமாக ஆட்டம் கண்ட சம்பவத்திற்குப் பிறகு அதிக விமான நிறுவனங்கள் பாதுகாப்பு நடைமுறைகளை மீண்டும் மதிப்பாய்வு செய்து வருகின்றன.
இந்த நிலையில் விமானத்திற்கு மிக மோசமாக ஆட்டம் ஏற்படுவது மிக அரிது என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) அதன் வருடாந்திரக் கூட்டத்தில் ஜூன் 3ஆம் தேதியன்று தெரிவித்தது.
விமானம் கடுமையாகக் குலுங்கும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றன.
செய்தியாளர்களிடம் பேசிய ஐஏடிஏயின் செயல்பாடு, பாதுகாப்புக்கான மூத்த உதவி தலைவர் நிக் கரீன், எஸ்கியூ321 விமானம் ஆட்டம் கண்ட சம்பவத்தால் பாதுகாப்புக்கான வழக்கமான நடைமுறைகளை அதிகமான நிறுவனங்கள் பரிசீலிப்பதற்கு வழி வகுத்துள்ளது என்று தெரிவித்தார்.
மே 21ஆம் தேதி எஸ்கியூ321 கடுமையான ஆட்டத்தில் சிக்கியதைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்லைன்சும் பாதுகாப்பு நடைமுறைகளை மாற்றியமைத்தது. அத்தகைய சமயத்தில் உணவு பறிமாறுதலை நிறுத்த அது உத்தரவிட்டுள்ளது. மேலும் விமானச் சிப்பந்திகள் இருக்கை வார்களை அணிந்து அமர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பத்திற்குப் பிறகு சில நாள்களில் கத்தார் ஏர்வேசின் கியூஆர்017 விமானமும் கடுமையாகக் குலுங்கியதால் 12 பேர் காயம் அடைந்தனர்.
வேறு ஏதாவது விமான நிறுவனங்களும் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளை மாற்றியிருக்கிறதா என்று கேட்டதற்கு இருக்கை வார் அணிவது, இருக்கை வார் அணிய வேண்டிய அறிகுறிகளைக் பின்பற்றுவது போன்ற வலுவான பாதுகாப்பு நடைமுறைகளை விமான நிறுவனங்கள் கொண்டுள்ளன. எஸ்கியூ321 சம்பவத்தால் அத்தகைய நடைமுறைகளை வலுவாகப் பின்பற்றுவதையும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.
கடைசியாக 1997ஆம் ஆண்டில் நரிடாவிலிருந்து ஹானலுலுவுக்குச் சென்ற யுடைடெட் ஏர்லைன்ஸ் விமானம் மோசமாகக் குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார்.