அதிகாரியின் சட்டையைப்பற்றியவர் மீது குற்றச்சாட்டு

அதிகாரியின் சட்டையைப்பற்றியவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
35e3b04b-dbde-44f0-ad3d-888318bf57cf
படம்: - தமிழ் முரசு

காவல்துறை அதிகாரி ஒருவர், பூகிஸ் வட்டாரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஆடவர் ஒருவர் மீது சோதனை நடத்தவிருந்தார்.

அப்போது அந்த ஆடவர், அதிரடியான முறையில் அதிகாரியிடம் சென்று அவரின் சட்டையைப் பற்றியதாக நம்பப்படுகிறது.

சிங்கப்பூரரான அந்த ஆடவர், செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 4) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அரசாங்க ஊழியர் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுக்க அவரிடம் பலவந்தமான முறையில் நடந்துகொண்டதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு பூகிஸ்+ கடைத்தொகுதியில் இருக்கும் ஹேவ்ஃபன் லைவ் ‌ஷோ எனும் பகுதியில் டான் சின் ஃபா என்ற 30 வயது ஆடவர் அக்குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகிறது. அன்றைய தினம் மத்திய காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த வட்டாரத்தில் குற்றத் தடுப்புச் சோதனைகளை மேற்கொண்டதாக காவல்துறை திங்கட்கிழமையன்று (ஜூன் 3) வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரியின் சட்டையையும் அவர் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையும் டான் பற்றியதாக நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்