நாட்டின் வளர்ந்து வரும் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்யவும் 2029ஆம் ஆண்டு முதல் ஹைட்ரஜன் பொருந்தக்கூடிய மேலும் இரு இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களை சிங்கப்பூர் கொண்டிருக்கும்.
வரும் 2029, 2030ஆம் ஆண்டுகளில் இயங்குவதற்காக இரண்டு புதிய மின் உற்பத்தி நிலையங்களைக் கட்டி, இயக்க எரிசக்தி சந்தை ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) தனியார் துறைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஒவ்வோர் ஆலையும் குறைந்தது 600 மெகாவாட் திறனைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஓர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 864,000 நான்கறை வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கக்கூடியது. அதாவது, 2030ஆம் ஆண்டுக்குள் இதுபோன்ற ஒன்பது ஹைட்ரஜன் பொருந்தக்கூடிய மின் உற்பத்தி நிலையங்கள் சிங்கப்பூரில் இருக்கும்.
ஒய்டிஎல் பவர்செராயா 2027ஆம் ஆண்டு வாக்கில் $800 மில்லியன் மின் நிலையத்தை கட்டும் என்று அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் எரிசக்தி சந்தை ஆணையம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. ஜூரோங் தீவில் கட்டப்படவுள்ள இந்த ஆலை, 30 விழுக்காடு வரை ஹைட்ரஜன் பயன்படுத்தும் திறனுடன் செயல்படத்தொடங்கும்.
ஜூரோங் தீவில் இதேபோன்ற கெப்பல் சக்ரா கோஜன் எனும் மின் ஆலையை கெப்பல் நிறுவனம் கட்டி வருகிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் அது கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தில் உள்ள மற்ற ஐந்து ஆலைகளை செம்ப்கார்ப், மெரான்டி பவர், பசிஃபிக் லைட் பவர் ஆகியவை அமைக்கின்றன. மெராண்டி, பசிஃபிக் லைட் ஆகியவற்றின் நான்கு ஆலைகள் 2025 இல் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை திடீரென விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் மின்சாரத்தை அதிகரிக்கும்.
ஒட்டுமொத்தமாக, இந்த ஒன்பது திட்டங்களும் 3.7 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் உச்சபட்ச மின்சாரத் தேவை அடுத்த ஆறு ஆண்டுகளில் குறைந்தது 3.7 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று ஆணையம் கணிக்கிறது. அதாவது, 2030ஆம் ஆண்டிற்குள் 10.1 கிகாவாட்டுக்கும் 11.8 கிகாவாட்டுக்கும் இடையில் தேவை அதிகரிக்கும் என அது முன்னுரைத்துள்ளது.
ஆர்வமுள்ள தரப்புகள் அக்டோபர் 31ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் தங்கள் விண்ணப்பங்களை எரிசக்தி சந்தை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். மேல்விவரங்களுக்கு காண்க: https://go.gov.sg/second-rfp-for-new-generation-capacity

