உலக தரவரிசையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் 8ஆம் இடம், முதல் 20ஆம் இடங்களில் என்டியு

உலக தரவரிசையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் 8ஆம் இடம், முதல் 20ஆம் இடங்களில் என்டியு

2 mins read
f240f81c-8c35-4264-9c6b-9bd0a07467f3
படம். - தமிழ் முரசு

உலக பல்கலைக்கழக தரவரிசையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் 10 இடங்களுக்குள் வருவதை நிலைநாட்டிக் கொண்டுள்ளது.

மேலும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) முதல் 20 இடங்களுக்குள் மீண்டும் வந்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ‘குவாகுரேலி சிமண்ட்ஸ் உலக பல்கலைக்கழக 2025ஆம் தரவரிசைப் பட்டியல்’ புதன்கிழமை (ஜூன் 5ஆம் தேதி) வெளியிடப்பட்டது. அதில் தேசிய பல்கலைக்கழகம் 8ஆம் இடத்திலும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 15ஆவது இடத்தையும் பிடித்தன. இதில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 2024ஆம் ஆண்டின் 26ஆம் இடத்திலிருந்து 15க்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு தரவரிசைப் பட்டியலில் உலகின் 106 நாடுகளிலிருந்து 1,500 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றன. இதில் ஆசியாவிலேயே ஆக உயர்தர பல்கலைக்கழகமாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது. அத்துடன், தரவரிசைப் பட்டியலின்படி ஆசியாவில் முதல் 10 இடங்களுக்குள் வந்த முதல் பல்கலைக்கழகமாகவும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் விளங்குகிறது.

இந்த தரவரிசைப் பட்டியலில் அதிக இடங்களை பிரட்டிஷ், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் இடத்தில் மசசூசட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியும் இரண்டாம் இடத்தில் இம்பீரியல் காலெஜ் லண்டனும் வந்தன.

இவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களை முறையே ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம், ஹாவர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியன பிடித்தன.

இது பற்றிக் கருத்துரைத்த தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் டான் எங் சாய், “சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் 10 இடங்களுக்குள் வந்து ஆசியாவில் தனது முன்னிலையை நிலைநாட்டிக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது பல்கலைக்கழகங்களின் கல்வித் துறைகள், ஊழியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஆகிய அனைவரின் ஒட்டுமொத்த சாதனையாகும்,” என்று கூறினார்.

“அனைவருக்கும் ஊக்கம் தரக்கூடியதும் அனைவரிடமும் ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதுமான துடிப்பான கல்விச் சூழலை ஏற்படுத்துவதில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் சமூக உறுதியுடன் உள்ளது,” என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்