சிங்கப்பூர் முன்னோடிகளுக்கும் அவர்கள் எடுத்துக்காட்டிய பண்புகளுக்கும் அர்ப்பணிப்பாக சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. அந்த நினைவகம் 2028ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் சுதந்திரத்தை நோக்கிச் சென்றபோது அதில் முக்கியப் பங்காற்றியவர்களின் நினைவுகளை ஆவணப்படுத்தும் வகையில் அந்த நினைவகம் செயல்படும். சிங்கப்பூரர்கள் மேம்பட்ட எதிர்காலத்தை நோக்கிச் செல்வதற்கும், சிங்கப்பூரர் எனும் உணர்வின் அடிப்படையில் சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கவும் இந்த நினைவகம் வழிவகுக்கும்.
அமரர் லீ குவான் யூ மறைவுக்குப் பிறகு நினைவகத்தை அமைப்பதற்கான திட்டம் 2015ல் வித்திடப்பட்டது. கரையோரப் பூந்தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள பே ஈஸ்ட் தோட்டத்தில் நினைவகம் அமைக்கப்படும்.
நினைவகத்தின் அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (ஜூன் 5) காலை பே ஈஸ்ட் தோட்டத்தில் இடம்பெற்றது. 1959ஆம் ஆண்டில் அதே ஜூன் ஐந்தாம் தேதியன்று சிங்கப்பூரின் முதல் அமைச்சரவையும் பதவியேற்றது.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி வைத்தார். அவருடன் கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் இரண்டாம் சட்ட அமைச்சரான எட்வின் டோங், தேசிய வளர்ச்சி, சமூக சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ, நினைவகக் குழுவின் இணைத் தலைவர்கள் ஆகியோர் இணைந்திருந்தனர்.
அமரர் லீ குவான் யூவின் முதல் மரம் நடும் இயக்கத்தை மையமாகக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாவில் மண் அள்ளுதல், மரம் நடுதல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றன.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு விழாவில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் சிறப்புரையாற்றினார்.
“சுதந்திர நாட்டை உருவாக்க சிங்கப்பூரைத் தோற்றுவித்த தலைவர்களின் கதைகளை இந்த நினைவகம் கூறும். சிங்கப்பூரின் நீண்டகால இலக்கை அமைப்பதற்குத் தேவையான லட்சியங்களை அவர்கள் நிறுவினார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூர் கண்டுள்ள வளர்ச்சி நினைவுகூரப்பட வேண்டும். சிங்கப்பூர் எவ்வாறு இந்த வளர்ச்சி கண்டது, நம் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஆவணப்படுத்த இதுவரை எந்தவொரு நினைவகமும் கட்டப்படவில்லை. ஒரு சிங்கப்பூரராக இருப்பதன் பொருள் என்ன, எதிர்காலச் சந்ததியினருக்கு இணக்கமான சிங்கப்பூரை எவ்வாறு தொடர்ந்து உருவாக்க முடியும் என்ற உணர்வை இந்த நினைவகம் பிரதிபலிக்க வேண்டும்,” என்று திரு லீ தனது உரையில் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரின் முதல் 20 ஆண்டுகாலத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கியப் பங்காற்றிய தலைவர்களான திரு லீ குவான் யூ, அவரது குழுவினர், பொது, தனியார் மற்றும் பொதுத்துறைகளில் உள்ள மற்ற முக்கியத் தலைவர்கள் மீது இந்த நினைவகத்தில் கவனம் செலுத்தப்படும்,” என்றும் அவர் கூறினார்.
இரு மாடி நினைவகத்தில் கண்காட்சிகள் இடம்பெறுவதற்கான இட வசதி, நகரத்தைக் காணக் காட்சிக்கூடம், பயிலரங்குகள் நடத்த அறைகள் போன்ற வசதிகள் இடம்பெறும்.
2015லிருந்து சிங்கப்பூரர்களில் பலர் நினைவகத்தின் உருவாக்கத்திற்குப் பல்வேறு வகைகளில் பங்களித்துள்ளனர். சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகம் உள்ளூர் விளக்கக் கூடத்தோடு இணைந்து சிங்கப்பூரர்கள் நினைவகத்தின் வசதிகளைக் கண்டு ரசிக்கும் வண்ணம் சுவரோவியம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. சுவரோவியத்தில் அடங்கியுள்ள கியூ ஆர் குறியீட்டை வருடி சிங்கப்பூரர்கள் அதில் உள்ள நடவடிக்கைகளில் கலந்துகொள்ளலாம்.
“சிங்கப்பூருக்காக நம் தலைவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதை நான் அதிகம் கற்றுக்கொண்டேன். சிங்கப்பூரராக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இந்த நினைவகம் மூலம் நாம் சிங்கப்பூரைப் பற்றி அதிக விழிப்புணர்வை பரப்பலாம்,” என்று தனது பல்கலைக்கழகம் மூலம் சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகம் முன்பு ஏற்பாடு செய்திருந்த ‘செமங்கட் யாங் பாரு’ எனும் கண்காட்சியில் கலந்துகொண்ட இளையர் தலைவர் பர்வின்பால் கோர் ஹரி சிங், 25, சொன்னார்.

