இளையர்களை மரபுடைமையுடன் இணைப்பதற்கும், அரும்பொருளகங்களில் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் தேசிய மரபுடைமைக் கழகமும் அதன் முதல் இளையர் குழுவும் இணைந்து சிங்கப்பூரின் முதல் இளையர் மரபுடைமை வரைவுத்திட்டத்தை வெளியிட்டுள்ளன.
சுமார் 1,000 இளையர்களிடம் ஆய்வுசெய்து தயாரிக்கப்பட்டு மார்ச் 29ஆம் தேதி பொங்கோல் வட்டார நூலகத்தில் வெளியிடப்பட்ட இந்த வரைவுத்திட்டம், மரபுடைமைக் கழகமும் 36 உறுப்பினர்களைக் கொண்ட அதன் இளையர் குழுவும் இணைந்து செய்த ஒன்றரை ஆண்டு முயற்சியின் பலன்.
இந்த முயற்சியின்வழி சிங்கப்பூரின் மரபுடைமைமீது அதிக ஆர்வம் கொண்ட இளையர்களை தாம் சந்தித்திருப்பதாகக் கூறினார் இளையர் குழுவின் துணைச் செயற்குழு இணைத் தலைவர் நூருல் அகிலா முகமட் கிராஷித். இளையர்கள் நமது மரபுடைமையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
சிங்கப்பூர் இளையர்களின் விருப்பங்களைப் பற்றிய நுண்ணறிவையும் மரபுடைமை, அரும்பொருளகத் துறையில் அவர்களின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் எவ்வாறு வலுப்படுத்தி நிலைநிறுத்துவது என்பது குறித்த பரிந்துரைகளை இந்த வரைவுத்திட்டம் வழங்குகிறது.
“இளையர் மரபுடைமை வரைவுத்திட்டத்தின்வழி இளையர்களின் எண்ணங்களையும் ஆற்றல்களையும் பயன்படுத்துவதோடு, அரும்பொருளகங்கள் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை மாற்றி, வாழ்நாள் முழுவதும் அவர்களை மரபுடைமை ஆதரவாளர்களாக வளர்க்க நினைக்கிறோம்,” என்றார் தேசிய மரபுடைமைக் கழகத் துணைத் தலைமை நிர்வாகி ஆல்வின் டான்.
நீல அச்சுப்படியின் வெளியீட்டுடன் சிங்கப்பூரின் இளம் தலைமுறையைக் கொண்டாட கழகமும் அதன் இளையர் குழுவும் ‘மை ஃபர்ஸ்ட் லவ்’ என்ற நடமாட்டக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்தக் கண்காட்சியில் சிங்கப்பூரர்கள் தங்களின் இளமைக் காலத்தில் ஏற்பட்டு இன்றும் மனதில் நிற்கும் முதல் காதலைப் பற்றி பகிர்ந்துகொண்டனர். ஒரு நபர், இடம் அல்லது செயலை பற்றியிருக்கும் அவர்களின் முதல் காதல் கதைகள் புதுமையான வகையில் பொதுமக்களின் பார்வைக்கு நூலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
‘மை ஃபர்ஸ்ட் லவ்’ டிராவலிங் கண்காட்சி பல இடங்களில் இடம்பெறவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- பொங்கோல் வட்டார நூலகம் (மே 29 முதல் ஜூன் 26 வரை)
- அங் மோ கியோ பொது நூலகம் (ஜூலை, தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்)
- ஜூரோங் வட்டார நூலகம் (ஆகஸ்ட், தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்)
- கிளமென்டி (செப்டம்பர், இடமும் தேதிகளும் பின்னர் அறிவிக்கப்படும்)

