பொம்மைத் துப்பாக்கி: சாங்கி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட குடும்பம்

பொம்மைத் துப்பாக்கி: சாங்கி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட குடும்பம்

2 mins read
8237d247-907c-4f0b-b001-46fcb1733b76
தங்களின் அனைத்து பைகளையும் திறந்து பொம்மை தண்ணீர் துப்பாக்கிகளை அதிகாரிகள் தேடியதாக திருவாட்டி லலிதா ராஜா தனது இன்ஸ்டகிராம் பதிவில் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

தாய்லாந்திலிருந்து சாங்கி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய குடும்ப உறுப்பினர்களின் பைகளில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் பொம்மைத் துப்பாக்கி இருந்ததால் அவர்கள் சாங்கி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அண்மையில், தானும் தன் கணவர், தனது இரு குழந்தைகள் உட்பட நான்கு பேர் தாய்லாந்திற்குச் சுற்றுலா சென்றதாகவும் அங்கு ஆந்நாட்டின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற சோங்க்ரான் தண்ணீர் விழாவில் கலந்துகொண்டதாகவும் தடுத்து வைக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த திருவாட்டி லலிதா ராஜா தனது இன்ஸ்டகிராம் பதிவில் கூறினார்.

அந்த விழாவில் தாங்கள் பயன்படுத்திய பொம்மை தண்ணீர் துப்பாக்கிகளைத் தங்களுடைய விடுமுறையின் நினைவுச்சின்னமாக சிங்கப்பூருக்குக் கொண்டுவர தங்கள் குடும்பம் முடிவு செய்ததாகவும் அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்கப்பூர் திரும்பிய அவர்கள், தங்கள் உடைமைகளைச் சேகரித்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்பட்டபோது அவர்களின் பைகளை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்ததாக திருவாட்டி லலிதா கூறினார்.

தங்களின் அனைத்து பைகளையும் திறந்து பொம்மை தண்ணீர் துப்பாக்கிகளை அவர்கள் தேடியதாகவும் அவர் தன் பதிவில் குறிப்பிட்டார்.

பின்னர் அவரது கணவர் அங்கு சுமார் ஒரு மணி நேரம் தடுத்துவைக்கப்பட்டதாகவும் இதேபோன்ற பொம்மைத் துப்பாக்கிகளைக்கொண்டு வந்த வேறு சிலரையும் அங்கு திருவாட்டி லலிதா கண்டதாகவும் கூறப்படுகிறது.

அந்தப் பொம்மைத் துப்பாக்கிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்றும் நாட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களைக் கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டு, அதற்கான ஆவணத்தில் கையெழுத்திடும்படி தன் கணவரை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர் என்றும் திருவாட்டி லலிதா தெரிவித்தார்.

பின்னர், தன் கணவர் விடுவிக்கப்பட்டதாகவும் சட்டத்தைப் பற்றி அறியாத மற்றவர்கள் தங்கள் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்கும்படியும் தாங்கள் பட்ட சிரமத்தை மற்றவர்கள் அனுபவிக்கக்கூடாது என்பதற்காகத் தான் இதைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பியதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்