$3 பி. பண மோசடி வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கடைசி நபருக்கு ஆக அதிகமான சிறைத் தண்டனை

2 mins read
1ed0b6d0-ad69-491c-acd2-b1b61fda0a9a
வாங் டெஹாய். - படம்: சீனக் காவல்துறை

சிங்கப்பூரின் ஆகப் பெரிய கள்ளப்பணத்தை நல்லப் பணமாக்கும் விவகாரத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 10 வெளிநாட்டவரில் கடைசி நபருக்கு ஆக அதிகமான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 7) அவருக்கு 16 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயது வாங் டெஹாய், தன் மீது சுமத்தப்பட்டிருந்த கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கியதன் தொடர்பிலான ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். 49 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் அவர் ஒப்புக்கெண்டார். அத்தொகை, பறிமுதல் செய்யப்பட்ட அவரின் சொத்துகளில் 90 விழுக்காடாகும்.

வாங்கிற்குத் தீர்ப்பளிக்கும்போது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன. மனிதவள அமைச்சின் வேலை அனுமதி அட்டை விவகாரங்களை நிர்வகிக்கும் அதிகாரியிடம் தவறான தகவல்களைக் கொடுத்ததாக அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.

வாங், 2012ஆம் ஆண்டிலிருந்து சீனாவில் இருக்கும் பந்தயம் பிடிப்பவர்களைக் குறிவைத்த சட்டவிரோத சூதாட்டத் தொழிலில் ஈடுபட்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பிலிப்பீன்சில் இயங்கிய அத்தொழிலை அவர் வேறு இடத்தில் இருந்தபடிக் கையாண்டார்.

அந்த சூதாட்டத் தொழிலில் ஈடுபட 2016ஆம் ஆண்டில் வாங்கிற்கு 80 மில்லியன் யுவான் (15 மில்லியன் வெள்ளி) வழங்கப்பட்டது. 2022ல் அவருக்கு எட்டு மில்லியன் ஹாங்காங் டாலரும் (1.3 மில்லியன் வெள்ளி) வழங்கப்பட்டது.

தனது மனைவி, பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ வாங் 2018ல் சிங்கப்பூரில் குடி புகுந்ததாக அரசு துணை வழக்கறிஞர் தெரிவித்தார்.

வாங்கிடம் இருந்த வெள்ளி நிற ‘ரிமோவா’ பெட்டியில் 2.2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான ரொக்கம் இருந்தது. அதன் தொடர்பில்தான் கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கும் குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி கைதானபோது பெட்டியில் இருந்த பொருள்கள் குறித்து காவல்துறை வாங்கிடம் கேட்டனர். அப்பெட்டி தனது மனைவிக்குச் சொந்தமானது என்று முதலில் கூறிய வாங், பெட்டியைத் திறக்குமாறு உத்தரவிடப்பட்டபோது அது தன்னுடையது என்பதை ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்