இவ்வாண்டு மே மாதம் முதல், விற்பனைக்கு உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளைப் பட்டியலிடும் அம்சம் கழகத்தின் இணையத்தளத்தில் இடம்பெற்று வருகிறது.
அந்த வசதி தொடங்கப்பட்டதிலிருந்து வீவக வீட்டுத் தகுதிக் (ஹெச்எஃப்இ) கடிதங்களுக்கு விண்ணப்பிக்கும் சொத்து முகவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீவக வீட்டை வாங்க ஒருவர் தகுதிபெறுகிறாரா இல்லையா என்பதை அக்கடிதம் தெரியப்படுத்தும். அதோடு, வீடு வாங்க விரும்புவோர் பெறக்கூடிய மானியங்கள் போன்ற விவரங்களும் அதில் இடம்பெறும்.
வீவக மறுவிற்பனை வீடு அல்லது தேவைக்கேற்பக் கட்டப்படும் வீட்டை (பிடிஒ) வாங்க விரும்புவோர் ஹெச்எஃப்இ கடிதத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
எனினும், சில சொத்து முகவர்கள், ஹெச்எஃப்இ கடிதங்களைக் கொண்டு வீவக இணையத்தளத்தில் தங்களின் மறுவிற்பனை வீடுகளை விளம்பரப்படுத்தும் உரிமையாளர்களைத் தொடர்புகொள்ளக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை, விதிமுறைகளை மீறும் ஒன்றாகும்.
சொத்து முகவர்கள், தாங்கள் வழங்கும் சேவைகளைத் தெரியப்படுத்த வீவக இணையத்தளம் வாயிலாக வீட்டு உரிமையாளர்களைத் தொடர்புகொள்ளக்கூடாது என்று கழகம் ஒரு சொத்து நிறுவனத்திடம் மின்னஞ்சல்வழி கூறியது. அந்த மின்னஞ்சலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்த்தது.
“உதாரணமாக, ஹெச்எஃப்இ கடிதங்களை வைத்திருப்பதைக் கொண்டு வீட்டு உரிமையாளர்களைத் தொடர்புகொள்ளும் செயல்,” என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறும் சொத்து முகவர்கள் மீது வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று சம்பந்தப்பட்ட சொத்து நிறுவனம் சொன்னது. தவறு இழைக்கும் முகவர்களுக்கு வீவக இணையத்தளத்தைப் பயன்படுத்தத் தடை விதிப்பது, விசாரணைக்காக அவர்களைப் பற்றி சொத்து முகவர் மன்றத்திடம் புகார் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்எஃப்இ கடிதம் செல்லுபடியாகும் காலத்தில் முகவர்கள் எவ்வாறு வீட்டை விற்கின்றனர் என்பதைக் கழகம் கண்காணிக்கும். ஒரு ஹெச்எஃப்இ கடிதம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
தொடர்புடைய செய்திகள்
வீவக இணையத்தளத்தின் மறுவிற்பனை வீட்டுப் பட்டியல் அம்சம் மே மாதம் 30ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. வீட்டு உரிமையாளர்கள் அல்லது அவர்களின் சொத்து முகவர்கள் விற்க நினைக்கும் வீடுகளை அதன் மூலம் விளம்பரப்படுத்தலாம்.
தற்போது இச்சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

