தனிமையில் இறக்கும் முதியவர்கள் குறித்த செய்திகள் அண்மை காலத்தில் அதிகம் காணப்படுகின்றன. சிலர் இறந்து பல நாள்களாகியும் அறியப்படாத நிலையும் நிலவுகிறது. இந்நிலையில், 2030க்குள் கிட்டத்தட்ட நான்கில் ஒரு சிங்கப்பூரர் 65 வயதை எட்டியிருப்பார் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களை அரவணைப்பதற்கு ஓர் ஒட்டுமொத்த சமூகமே தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்தும் பலதரப்பினரின் கருத்துகளை அறிந்து வந்தது தமிழ் முரசு.
நான்கு சுவர்களுக்குள் சிக்கல்
கணவரின் மறைவுக்குப் பின்னர் திக்கற்று நின்றனர், இல்லத்தரசிகளாக இருந்து அதுவரை கணவரைப் பெரிதும் சார்ந்திருந்த திருவாட்டி வேலம்மாளும், திருவாட்டி லெட்சுமியும்.
திருவாட்டி வேலம்மாள் 1980களில் கணவரின் மறைவுக்குப் பின் பள்ளி உதவியாளராக வேலை தேடிக் கொண்டார். 70 வயது திருவாட்டி லெட்சுமியோ 12 ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்த சமயத்தில் பணிபுரியும் நிலைமையில் இல்லை.
கடந்த ஆறு ஆண்டுகளாக தெம்பனிசில் ஓரறை வாடகை வீட்டில் தனியாக வாழும் திருவாட்டி லெட்சுமி முதலில் பயந்த சுபாவத்தோடு, சுயமாகச் செயல்படும் நம்பிக்கையின்றி இருந்தார். வெளியில் செல்லவோ, பிறருடன் உறவாடவோ அவருக்கு விருப்பம் இல்லை; ஆங்கிலம் பேசவும் சிரமப்பட்டார். உடல் எடை பாதிப்புகளால் கடந்த ஐந்தாண்டுகளாக சக்கர நாற்காலியில் வலம் வர வேண்டிய கட்டாயம்.
இவை தடைகளாக விளங்கினாலும், லயன்ஸ் பிஃப்ரெண்டர்ஸ் அமைப்புடன் தமது முதல் படியை எடுத்து வைத்தார் திருவாட்டி லெட்சுமி. மெல்ல தொண்டூழியம் செய்வது, வெளியில் சென்று அலுவல்களை முடிப்பது என தமது மனச்சோர்விலிருந்து அவரை லயன்ஸ் பிஃப்ரெண்டர்ஸ் மீட்டெடுத்தது.
தமது மூன்று பிள்ளைகளின் பராமரிப்பில் இருக்கும் திருவாட்டி லெட்சுமிக்கு பாதுகாப்பு குறித்த கவலைகளும் இருந்தன. தாம் தனியாக வசிப்பதைத் தெரிந்துகொண்டு அவ்வப்போது கடன் கேட்டு வருவோர், நட்பு கொள்ளும் பேரில் வீட்டுக்குள் நுழைய முற்படுவோர், அண்டைவீட்டுக்காரர்கள் துணிமணிகளைப் பறிப்பது எனச் சில அச்சுறுத்தல்கள் அவரை அண்மைகாலமாய் பாதித்து வருகின்றன.
“சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பிரச்சினைகளைக் கண்டு மிகவும் பயப்படுவேன். ஆனால், இப்போது நமக்கு நாமே என்ற சிந்தனையைக் கொண்டுள்ளேன். முதியோர் நாம் யாரையும் சார்ந்திருக்காமல், நம்பிக்கையோடு இருந்தால் எதையும் ஒரு கை பார்த்துவிடலாம்,” என்று கூறினார் திருவாட்டி லெட்சுமி வெற்றிவேலு.
இத்தகைய சிக்கல்கள் இருப்பினும், தனிமையையே விரும்புகிறார் ஓய்வுபெற்ற 67 வயது திருவாட்டி வேலம்மாள் சின்னன் ராமசாமி. இடது கண் பார்வையைப் பெரும்பாலும் இழந்துள்ளதோடு, அதிக நேரம் நின்றால் கால் வீங்கும் சிக்கலையும் அவர் கொண்டுள்ளார். தற்போது மகன் வீட்டில் வசித்து வரும் அவர், கூடிய விரைவில் அருகிலேயே உள்ள வாடகை வீட்டிற்கு இடமாறுவதை எதிர்பார்த்து இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் வேலை செய்துவந்த திருவாட்டி வேலம்மாள், தமது மத்திய சேம நிதித் தொகை குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தியதை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளானார்.
அப்போது திருவாட்டி வேலம்மாள், என்டியுசி பராமரிப்பு நிலையத்தில் உதவி தேடிக்கொண்டார். மகனின் வீட்டுக்கு இடமாறிய பின்னரும், ஜூரோங்கிலிருந்து என்டியுசி பராமரிப்பு நிலையத்துக்கு வாரநாள்கள்தோறும் வந்து செல்கிறார் அவர்.
ஒரு கட்டத்தில் வாழ்வில் கிட்டத்தட்ட முற்றிலும் நம்பிக்கை இழந்ததாக கூறினார் திருவாட்டி வேலம்மாள்.
“தமிழ்க் குடும்பங்களில் பிள்ளைகளைப் பெற்றோர் எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால், அவ்வாறு இருந்துவிட்டால் நாம் சுதந்திரமாக இயங்குவது பாதிக்கப்படும்,” என்றார் அவர்.
அத்தகைய நிலைமையைத் தடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில், தம் மகனும் மருமகளும் சிறப்பாகத் தம்மை பராமரிக்கும்போதும் தனியாக வீடு பார்த்துக்கொள்வதில் உறுதியாக உள்ளார் அவர்.
‘தனிமை சாபமன்று’
ஜூரோங் பகுதியில் தனியாக வசிக்கிறார், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் முடங்கிய 84 வயது திரு ராஜூ சண்முகம்.
இவருக்குப் பெரிதும் கைகொடுக்கின்றன, தொழில்நுட்ப வசதிகள். ஹோம்+ என்ற சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் முதியோர் சேவை, தனிமையில் இருந்தாலும் பயமின்றி இயங்க உறுதுணையாக இருப்பதாய் அவர் கூறினார்.
அவசரநிலை ஏற்பட்டால் திரு ராஜூ கழுத்தில் தாம் மாட்டிக்கொள்ளும் ‘பேனிக் பொத்தான்’ எனும் சிவப்புநிற பொத்தானை அழுத்துவார். உடனே அவசர மருத்துவ ஊர்தி அவரின் வீட்டுக்கு அனுப்பப்படும். 24 மணி நேரமும் இச்சேவை வழங்கப்படுவதால், இரவு, அதிகாலை நேரங்களில் மூச்சுத் திணறல் ஏற்படும்போது அவர்களை நாடியுள்ளார் திரு ராஜூ.
கதவை ஒட்டி உள்ள ஓர் உணர்கருவி, திரு ராஜூ வீட்டுக்கதவைத் திறக்கிறாரா என கண்காணிக்கும். வெகு நாளாய் வீட்டுக்கதவு திறக்கப்படாவிடில் பணியாளர்கள் அவரின் நலமறிய வந்துவிடுவர்.
ஈஸ் 2.0 எனும் ‘சுறுசுறுப்பான முதியோருக்கான மேம்பாட்டுத் திட்டத்தை’ தேசிய வளர்ச்சி அமைப்பு விரிவாக்கி வந்துள்ளது. வாடகை வீடுகளில் அவசர பொத்தான்கள் பொருத்தப்படுவது, முதியோருக்கான சிறப்பு சுவர் கைப்பிடிகள் முதலிய வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டன.
அண்டைவீட்டார் உதவிக்கரம் நீட்டுவது அவசியம்
புக்கிட் மேரா பகுதியில் அண்மைகாலத்தில் தனிமையில் இறந்த ஒரு முதிய ஆடவரின் அண்டைவீட்டுக்காரரான பிரபா, இச்சம்பவங்கள் அப்பகுதி வாடகை வீட்டு அண்டைப் புறங்களில் வழக்கமாகி வருவதாக கூறி வருந்தினார்.
ஓரறை வாடகை வீடுகள் நிறைந்த புளோக்குகளில் பல முதியோர் தனித்து வாழுகின்றனர். இவர்களில் சிலர் சக்கர நாற்காலிகளில் நடமாடுகின்றனர்; அதிலும் சிலர் அவற்றை மின்னூட்ட மறந்துவிடுவர்.
“இவ்வீடுகளின் கதவுகள் நாள்தோறும் பூட்டியே இருக்கும், யாரும் யாரோடும் பேசிக்கொள்வது மிக அரிது. வாடகை வீட்டுக் குடியிருப்பாளர்கள் சமூகமாக ஒன்றுகூடும் நிகழ்வுகளும் அரிதாக இருப்பதாக தெரிகிறது,” என்றார் பிரபா, 61.
இறந்துபோன அந்த ஆடவரின் பெயர் தெரியாவிட்டாலும், நடமாட இயலாமல் இருந்த அவருக்கு முன்னர் உதவியிருந்தார், எட்டாண்டுகளுக்கு முன்னர் குடிபுகுந்த பிரபா. அடிக்கடி தனிமையில் இறந்துபோகும் முதியோரைப் பற்றிய செய்திகளைக் காணும் அவர், வயதான இரு சீன அண்டைவீட்டுக்காரர்களிடம் நட்பு வளர்த்துக் கொண்டார்.
“இருவரும் உடற்குறை உள்ளோர், குடும்பம் இல்லாதோர். எனினும், முதியோருக்கென உள்ள எந்த திட்டத்திலும் சேர அவர்கள் விருப்பப்படுவதில்லை. சில சமயம் வீடு பூட்டியே இருந்தால் நான் சென்று விசாரிப்பேன்,” என்றார் பிரபா.
அதே தளத்தில் உள்ள 80 வயது திருவாட்டி முத்தம்மா, கை, கால் உடற்குறையுள்ள மகனோடு வசித்து வருகிறார். அவரும், மூட்டு வலியால் நடக்க முடியாத சமயங்களில் சில வாரங்கள்கூட வெளியில் செல்வதை தவிர்த்துவிடுவதுண்டு. நீரிழிவு நோய் உள்ள அவரை மருத்துவமனைக்கு அவ்வப்போது கூட்டி செல்ல மகள் வருவார்.
“அண்டைவீட்டுக்காரர்கள் பெரும்பாலும் சீனர்கள். மொழி தெரியாததால் நான் பேசுவதில்லை. வீட்டை சுத்தப்படுத்துவது மிக கடினமாக உள்ளது. கொவிட் காலத்திலிருந்தே வீட்டுப் பணியாளர்கள் கிடைக்காமலும் உள்ளது,” என வருந்தினார் திருவாட்டி முத்தம்மா.
திரு ராஜூ தமது அண்டைவீட்டார் பற்றி கூறுகையில், “எனது சீன அண்டைவீட்டுக்காரர் ஒவ்வொரு சனிக்கிழமையும் எனக்காக காய்கறிகள் வாங்கி, சமையலறையில் அடுக்க உதவுவார். மற்றுமொரு மலாய் அண்டைவீட்டுக்காரர் நலம் விசாரிப்பார்; சில சமயம் உணவு சமைத்துக் கொடுப்பார். அவர்கள் இருப்பதே நம்பிக்கை ஊட்டுகிறது,” என்றார்.
முதியோர் மனப்பான்மை
தொண்டூழியர் திருவாட்டி தமிழரசி என்டியூசி ஹெல்த் பராமரிப்பு நிலையத்தில் முதியோரின் தேவைகளை அறிந்து உதவி வருகிறார். அண்டைப் புறங்களில் இயங்கி வரும் குடியிருப்பாளர் குழுக்கள் இன்னும் உன்னிப்பாகவும் நெருக்கமான தொடர்போடும் முதியோர் நலனை பராமரிக்க முடியும். நிகழ்வுகள் ஒருங்கிணைக்கும்போது முதியோர் ஈடுபாட்டை ஊக்குவிக்கவேண்டும் என்றார் திருவாட்டி தமிழரசி.
பல முதியோரான தமிழர்கள் பரமாரிப்பு நிலையத்துக்கு வந்து பார்த்துவிட்டு தயக்கத்துடன் செல்வதும், சமூக நிகழ்வுகளில் குறைந்தளவில் பங்கேற்பதும் திருவாட்டி தமிழரசியின் கவலைகள். பராமரிப்பு நிலையத்தில் அவரவர் சுவைக்கேற்ற உணவில்லை என்பது சிலரின் குறைபாடு. இவற்றைத் தாண்டி வயதானவர்களுக்கு நல்லதொரு சூழலை அமைத்து தரவேண்டும் என்பது இவரின் கருத்து.
“தனிமையில் இருப்பதே முதியோரின் முக்கிய மனநல பிரச்சினைகளை உருவாக்குகிறது. மறதிநோய், ஹார்டிங், அதாவது, வீட்டில் அதிக பொருள்களைக் குவிக்கும் மனப்பான்மை, முதலியவை ஏற்படக்கூடும்,” என்றார் திருவாட்டி தமிழரசி.
ஶ்ரீ நாராயண மிஷனில் சமூகப்பணி பிரிவின் தலைவர் யோகேஸ்வரி சந்திரசேகரன், மனநலப் பிரச்சினைகள் உள்ள முதியோருக்கு மருத்துவ சேவை மட்டுமல்லாது, உளவியல், சமூக ரீதியிலான உதவி தேவைப்படுவதாக வலியுறுத்தினார்.
சமய நம்பிக்கை, பொழுதுபோக்கு, நட்பு வளர்ப்பது முதலிய வழிகளில் முதியவர்கள் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவதற்கு ஆதரவு அளிக்க ஶ்ரீ நாராயாண மிஷன் முனைகிறது.
‘சமூகத்தில் முதுமையடையவேண்டும்’
பராமரிப்பு நிலையங்களுக்குள் முதியோர் ஒதுக்கப்படாமல், சமூகத்தினுள் முதுமையடைய வழிவகுக்கும் நமது முயற்சிகள் அமையவேண்டும் என்றார் (ஏஐசி) தலைமை நிர்வாகி திரு தினேஷ் வாசுதாஸ்.
உடற்பயிற்சி செய்ய, சேர்ந்து உணவு உண்ண, நிகழ்வுகளைக் கொண்டாட என முதியோர் வெளியில் வருவதும் சமூகத்தினரோடு அன்றாட வாழ்வில் உரையாடுவதும் அவசியம்.
அவ்வாறு சமூகத்திலேயே முதுமையடைய வகைசெய்யும் முயற்சிகள் முதியோரின் உடல்நலத்தை மட்டுமின்றி, மனநலனையும் பேணும் என்றார் அவர். குடும்ப பிணைப்புகளைப் பேணி, நிலைத்தன்மையுடைய தீர்வாக இது அமையும் என்பது அவரின் நம்பிக்கை.
எனவே, ஏ.ஏ.சி எனப்படும் துடிப்பாக மூப்படையும் நிலையங்கள் அக்கம்பக்கங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கை 2030க்குள் கிட்டத்தட்ட இருமடங்காக உயரவுள்ளது.
https://supportgowhere.life.gov.sg எனும் தளம் முதியோர் தேவைகளுக்கு விடையளிக்க வல்லது. தகுதிபெறக்கூடிய மானியங்களைக் குறித்தும் அவற்றுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்தும் இத்தளம் விவரங்களைத் தெரிவிக்கிறது. வீட்டு முகவரியைப் பதிவிட்டு, தமக்கு மிக அருகில் உள்ள ஏ.ஏ.சி எது என முதியோர் கண்டறியலாம். இவற்றில் இணைவதற்கு முன்பதிவு அவசியமில்லை.
முதியவர்களின் பராமரிப்பாளர்களையும் கருத்தில் கொள்ளும் ஏஐசி, அவர்களுக்கான பயிற்சிகள், தேவைப்படும் நேரங்களில் தற்காலிகமான வீட்டுப் பராமரிப்பு சேவை, தனிப்பட்ட ஆலோசனை சேவை முதலிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூரின் அடுத்தகட்ட இலக்கு, முதியோரின் இறுதி ஆண்டுகளில் உடல்நலத் தளர்வைத் தவிர்ப்பதாகும். வயதாகி இறக்கும் முன்னர் நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் காலத்தைக் குறைக்க, ஹெல்தியர் எஸ்ஜி முதலிய முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பல அக்கம்பக்கங்களில் சாலை வசதிகள் போன்ற உள்கட்டமைப்புகளும் முதியோரைக் கருத்தல்கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒட்டுமொத்த சமூகமாக நாம் ஒருங்கிணைக்கும் வளங்கள் முதியவர்களைச் சென்றடைந்து முழு பலன் ஈட்டுவதற்கு குடும்ப ஆதரவும் மிக அவசியம் என்றார் திரு தினேஷ்.
“நமது மிகப் பெரிய சிக்கல் விழிப்புணர்வின்மையே. முதியோர் சுயமாக உதவி நாடி, துடிப்பாக, நிறைவாக முதுமையடைவதற்கான வழிமுறைகள் இன்னும் அதிகமானோரை சென்றடையவேண்டும்,” என்று கூறினார் திரு தினேஷ்.