மோசமான மறதிநோய் இருக்கும் மூத்தோரின் உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வீட்டில் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் பராமரிப்பாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் மேற்கொள்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
215 பராமரிப்பாளர்களில் 47 விழுக்காட்டினர் அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதாக டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி நடத்திய ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இணைந்து அப்பள்ளியை நடத்துகின்றன.
பாதிக்கப்பட்ட மூத்தோரை விழாமல் பார்த்துக்கொள்வது, அவர்கள் கவனிப்பின்றி எங்கும் செல்லாமல் இருக்கச்செய்வது, மருத்துவக் கருவிகளை அவர்களின் உடலிலிருந்து அகற்றுவது; இத்தகைய காரணங்களுக்காக பராமரிப்பார்கள் மறதிநோய் உள்ள மூத்தோரின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்தோர் தாக்கக்கூடிய ஆற்றலைக் காட்டும் நேரங்களிலும் செயல்பாடு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டியூக்-என்யுஎஸ் ஆய்வின் முடிவுகள், ‘அமெரிக்கன் ஜெரியாட்ரிக்ஸ் சொசைட்டி’ மருத்துவ சஞ்சிகையில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டன. பராமரிப்பாளர்கள் பொதுவாக வார்கள், படுக்கை உறைக்குப் பயன்படுத்தப்படும் கவ்வி உள்ளிட்டவற்றைக் கொண்டு மூத்தோரின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
பொது மருத்துவமனைகள், வீட்டில் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் அறநிறுவனங்கள், அந்திமகாலப் பராமரிப்பு இல்லங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பராமரிப்பாளர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2018ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் 2021ஆம் மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் மறதிநோய் உள்ள மூத்தோருக்கு வழங்கப்பட்ட பராமரிப்புச் சேவைகள் ஆய்வில் கருத்தில்கொள்ளப்பட்டன.
மனதளவில் நண்பர்களிடமிருந்து வலுவான ஆதரவு பெறும் பராமரிப்பாளர்கள் செயல்பாடு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சாத்தியம் குறைவு என்பது ஆய்வில் தெரியவந்தது. அதேவேளை, அதிக மனவுளைச்சலுக்கு ஆளாகும் பராமரிப்பாளர்கள் அவ்வாறு செய்யும் வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரியவந்தது.
பராமரிப்பாளர்களுக்கு மனதளவில் கூடுதல் ஆதரவு வழங்குவதன் முக்கியத்துவத்தை ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மறதிநோய் உள்ள மூத்தோரின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது சிறந்த தீர்வாக இல்லாமல் இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
சவாலைக் கையாள புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவுரை வழங்கப்படுகிறது.