சிங்கப்பூரில் அதிகமான பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது கருத்தரிப்பு விகிதம் நீண்டகாலமாக குறைந்து இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூரின் மொத்த கருத்தரிப்பு விகிதம் ஒன்றுக்கும் குறைவாகப் பதிவானது. சிங்கப்பூரின் வரலாற்றில் இவ்விகிதம் இவ்வளவு குறைவாகப் பதிவானது இதுவே முதல்முறையாகும்
2005லிருந்து 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் திருமணம் செய்துகொள்ளாத பெண்களின் விகிதம் அதிகரித்தது. அதனால் திருமணமான பெண்களுக்கிடையே கருத்தரிப்பு விகிதம் சற்று கூடியபோதும் ஒட்டுமொத்த கருத்தரிப்பு விகிதம் பாதிக்கப்பட்டது.
1990லிருந்து 2005ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் திருமணம் ஆன பெண்களுக்கிடையிலான கருத்தரிப்பு விகிதம் சரிந்ததே மொத்த கருத்தரிப்பு விகிதம் குறைந்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்தது.
புள்ளி விவரப் பிரிவு, கருத்தரிப்பு விகிதம் குறைவதற்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆராய்ந்து இத்தகவல்களை வெளியிட்டது. சென்ற மாதத்துக்கான பிரிவின் செய்திக் கடிதத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டன.
சென்ற ஆண்டுக்கான சிங்கப்பூரின் மொத்த கருத்தரிப்பு விகிதம் 0.97ஆகப் பதிவானது. அந்த வகையில் இவ்விகிதம் ஆகக் குறைவாக இருக்கும் உலக நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.
சராசரியாக ஒரு பெண் பெற்றுக்கொள்ளக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையை மொத்த கருத்தரிப்பு விகிதம் குறிக்கிறது.
சிங்கப்பூரர்களில் கூடுதலானோர் மணமுடிக்காது இருந்தால் மொத்த கருத்தரிப்பு விகிதம் தொடர்ந்து குறையும் என்பது எதிர்பார்ப்பு என்று மக்கள்தொகை விவகாரங்களை ஆராயும் கல்வியாளர்கள் கூறுகின்றனர். பல சிங்கப்பூரர்கள் திருமணம் தேவையில்லை என்று நினைப்பதாக மக்கள்தொகை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதனால் கூடுதலானோர் மணமுடிக்காமல் இருக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, சிங்கப்பூரில் திருமணம், இப்போதெல்லாம் வாழ்க்கை இலக்காகப் பார்க்கப்படுவதில்லை என்று கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வுக் கல்வியாளரான டாக்டர் மேத்தியூ மேத்தியூஸ் கூறினார்.
“திருமணம் ஆகாதவர்கள் மீது முத்திரை குத்தும் போக்கு வெகுவிரைவில் மாறிவிட்டது. அது நல்லதே. திருமண வயதை அடைந்த ஒருவர் மணமுடிக்காமல் இருப்பது பல காலமாக இழிவாகப் பார்க்கப்பட்ட ஒன்று,” என்று டாக்டர் மேத்தியூ மேத்தியூஸ் குறிப்பிட்டார்.
21-34 வயதுப் பிரவில் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் திருமணத்தில் ஆர்வம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வுக் கல்வியாளரான கல்பனா விக்னேஷா இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்தது.
வேலை பார்த்துக்கொண்டே குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைத் தங்கள் தாய்மார்கள் சுமப்பதைக் காண்பதாகப் பெண்கள் தன்னிடம் கூறினர் என்று டாக்டர் விக்னேஷா சுட்டினார்.
“அதனால் வீட்டில் தங்களுக்கு இணையாகச் செயல்படும் நிலையில் ஆண்கள் இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர்,” என்றார் டாக்டர் விக்னேஷா.
எனினும், திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதில் பல இளம் சிங்கப்பூரர்கள் விருப்பம் காட்டுகின்றனர் என்பதைப் பல ஆய்வுகள் தொடர்ந்து தெரிவிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

