புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள காக்கி புக்கிட் சமூக மன்றத்தில் மூத்தோருக்கு சுகாதாரப் பரிசோதனை வசதியுடன் மின்னிலக்க மேம்பாட்டு வசதியும் உள்ளது.
இவற்றுடன், வேலை தொடர்பாக உதவி தேவைப்படுவோருக்கு ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள்தொகையின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் வசதி, அங்குள்ள வசதிகளை எளிதில் அணுகும் நிலை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து சமூக மன்றம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நேற்று அல்ஜுனிட் குழுத் தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஷம்சுல் கமார் அந்த சமூக மன்றம் சனிக்கிழமை (ஜூன் 8) திறப்பு விழா கண்டபோது கூறினார்.
“இந்த சமூக மன்ற மேம்பாடு காக்கி புக்கிட் பகுதி குடியிருப்பாளர்களில் 50 விழுக்காட்டினர் 50 வயதுகளில் அல்லது அதற்கும் அதிக வயதுடையோராக இருக்கின்றனர். இந்த மக்கள்தொகை மாற்றத்துக்கு ஏற்றவாறு சமூக மன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், குடியிருப்பாளர்களிடம் இருந்து நான் பெற்ற கருத்துச் சேகரிப்பும் கவனத்தில் கொள்ளப்பட்டது,” என்று திரு ஷம்சுல் கூறினார்.
மேலும், குடியிருப்பாளர்கள் வேலை ஆலேசானையும் இங்கு பெற்று 280க்கும் மேற்பட்ட வெவ்வேறு நிறுவனங்கள், மற்ற சிறிய, நடுத்தர நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப வேலையில் அமர்த்தப்படுவர்.
சமூக மன்றத் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், வரும் ஆண்டுகளில் காக்கி புக்கிட் தொகுதியில் மேலும் பல மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
“புதிய காக்கி புக்கிட் பலதுறை மருந்தகம், ஈஸ்டர்ன் பொது மருத்துவமனை, ஈஸ்டர்ன் சமூக மருத்துவமனை ஆகியவை குடியிருப்பாளர்கள், குறிப்பாக மூத்தோர் சுகாதாரப் பராமரிப்பு தேவையைப் பூர்த்தி செய்யும்.
“நீண்டகால அடிப்படையில், பாய லேபார் விமானத் தளம் வேறு இடத்திற்கு மாற்றப்படும்போது, அருகிலுள்ள நகரங்களை மறுமேம்பாடு செய்து, காக்கி புக்கிட் உட்பட, குடியிருப்பாளர்களுக்கு மேலும் அதிக வசதிகளை அளிக்கலாம்,” என்று திரு ஹெங் சுவீ கியட் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இத்துடன், காக்கி புக்கிட் சமூக மன்றத்தில் உள்ள எஸ்ஜி மின்னிலக்க அலுவலகத்திலும் மூத்தோர் உதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

