அதிக நோயாளிகளுக்கு உடல்நோவு தணிப்பு இல்லச் சேவை வழங்கத் திட்டம்

அதிக நோயாளிகளுக்கு உடல்நோவு தணிப்பு இல்லச் சேவை வழங்கத் திட்டம்

2 mins read
c2b51239-36c3-4812-bdf2-8e069bba53ad
‘அஸிஸி ஹாஸ்பைஸ்’ அந்திமகாலப் பராமரிப்பு அமைப்பு - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடல்நோவை தணிப்பதற்கான இல்லச் சேவைகள் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் 50 விழுக்காடு அதிகரிக்க ‘அஸிஸி ஹாஸ்பைஸ்’ அந்திமகாலப் பராமரிப்பு அமைப்பு திட்டமிடுகிறது.

சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைவதால் உடல்நோவு தணிப்பு இல்லச் சேவைகளுக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதை எதிர்பார்த்து அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த அமைப்பின் உடல்நோவு தணிப்பு இல்லச் சேவைகளைப் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 2,058 ஆக இருந்தது. இன்னும் ஈராண்டுகளில் அந்த எண்ணிக்கையை 3,000க்கு அதிகரிக்கத் திட்டமிட்டு இருப்பதாக ‘அஸிஸி ஹாஸ்பைஸ்’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சூ ஷியு லிங் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) கூறினார்.

அந்த அமைப்பின் கேளிக்கை நாள் கொண்டாட்டங்களின் தொடர்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த அமைப்பு தனது ஆகப்பெரிய நிதித் திரட்டு நிகழ்ச்சியை தோ பாயோவில் உள்ள எஸ்ஜேஐ அனைத்துலகப் பள்ளியில் நடத்தியது.

ஒட்டுமொத்த உடல்நோவு தணிப்புச் சேவை பராமரிப்புத் துறையும் தனது சேவைகளை அதிகரிக்க முயன்று வருகிறது. மக்கள்தொகை மூப்படைவதால் அடுத்த ஈராண்டு முதல் நான்காண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தத் துறையின் சேவை அதிகமாகத் தேவைப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது,” என்றார் திருவாட்டி சூ.

2030ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒருவர் 65 வயதைத் தொடுவார் என்ற கணிப்பின் அடிப்படையில் அவர் அவ்வாறு கூறினார்.

ஓராண்டு காலம் அல்லது அதற்கும் குறைவான காலம் ஆயுளுடன் இருப்பார் என்று முன்கூட்டிக் கணிக்கப்பட்டு, வசிக்கும் இல்லத்திலேயே மரணமடைய விரும்பும் நோயாளிகளுக்குத் தேவைப்படும் சேவைகளை அவர்களின் இல்லத்திலேயே வழங்குவது உடல்நோவு தணிப்புச் சேவை.

தற்போதைய நிலவரப்படி, ‘அஸிஸி ஹாஸ்பைஸ்’ அமைப்பு அதுபோன்ற 600 நோயாளிகளுக்கு ஒரேநேரத்தில் இல்லச் சேவை வழங்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 550 ஆகவும் 2016ஆம் ஆண்டு 150 ஆகவும் இருந்தது.

இந்த எண்ணிக்கையை 2026ஆம் ஆண்டுக்குள் 800க்கு உயர்த்தும் திட்டம் உள்ளதாகவும் திருவாட்டி சூ தெரிவித்தார்.

உடல்நோவு தணிப்பு இல்லச் சேவைகளை கடந்த ஆண்டின் 2,058லிருந்து 3,000க்கு அதிகரிக்கத் திட்டமுள்ளது.
‘அஸிஸி ஹாஸ்பைஸ்’ சூ ஷியு லிங்
குறிப்புச் சொற்கள்