சிங்கப்பூரின் புகழ்பெற்ற அடையாளமாக விளங்கும் சி.கே. டேங் கடைத் தொகுதியின் டேங் குடும்பத்தின் மாளிகை 83 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்படவிருக்கிறது.
சிறந்த தரமிக்க மாளிகை, 0.28 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. சொத்து விற்பனை நிறுவனமான நைட் ஃபிராங்க் அந்த சொத்தை ஜூன் 7ஆம் தேதி அன்று விற்பனைக்கு பட்டியலிட்டுள்ளது.
பொட்டானிக் கார்டன்ஸ் எனப்படும் பூமலைக்கு அருகே செல்வந்தர்கள் வசிக்கும் விக்டோரியா பார்க்கில் அந்த மாளிகை இடம்பெற்றுள்ளது. எட்டு குளியல் அறைகளும் ஒரு நீச்சல் குளமும் அதில் உள்ளன.
இந்தச் சொத்துக்கு சொந்தக்காரர் திரு டேங் வீ கிட் என்று புளூம்பெர்க் நியூஸ் தகவல் மூலம் அறியப்படுகிறது. இவர், சி.கே. டேங் என்று பிரபலமாக அறியப்பட்ட காலஞ்சென்ற டேங் சூன் கெங்கின் மகன் ஆவார். சீனாவில் பிறந்த தொழில் அதிபரான சி.கே. டேங், சிங்கப்பூரின் அடையாளமாக இன்றும் செயல்படும் சி.கே. டேங் கடைத் தொகுதியை ஆர்ச்சர்ட் ரோட்டில் நிறுவினார். தற்போது இவரது வாரிசான டேங் வீ கிட், தனது குடும்பத்துக்குச் சொந்தமான மாளிகையை விற்க விரும்புவதாக நைட் ஃபிராங்க் அறிவிப்பு மூலம் தெரிய வருகிறது.

