தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்கியூ321 சம்பவம்: காயமடைந்தோருக்கு இழப்பீடு

1 mins read
29204a98-aee1-4339-b67d-7f20c10922d8
இலேசாக காயமடைந்தோருக்கு 10,000 அமெரிக்க டாலரும் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டு, நீண்டகால மருத்துவப் பராமரிப்பும் நிதி உதவியும் தேவைப்படுவோருக்கு முன்பணமாக 25,000 அமெரிக்க டாலரும் வழங்கியிருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது. - படங்கள்: ராய்ட்டர்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மையில் லண்டனிலிருந்து சிங்கப்பூருக்குப் பறந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஸ்கியூ321 விமானம் நடுவானில் மிகக் கடுமையாக ஆட்டங்கண்டது.

இதில் ஒருவர் மாண்டார். பலர் காயமடைந்தனர்.

விமானம் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிற்குத் திருப்பிவிடப்பட்டது.

காயமடைந்தோர் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில், அந்தச் சம்பவத்தின்போது இலேசாகக் காயமடைந்தோருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 10,000 அமெரிக்க டாலர் (S$13,534) இழப்பீடு வழங்கியுள்ளது.

கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளை இழப்பீட்டுத் தொகை குறித்து கலந்துரையாட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அழைத்துள்ளது.

அவரவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு ஏற்ப இழப்பீடு தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டு, நீண்டகால மருத்துவப் பராமரிப்பும் நிதி உதவியும் தேவைப்படுவோருக்கு முன்பணமாக 25,000 அமெரிக்க டாலர் வழங்கியிருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.

இழப்பீடு ஒருபுறம் இருக்க, ஆட்டங்கண்ட எஸ்கியூ321 விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் அவர்களது பயணச் சீட்டுக்கான பணம் முழுவதும் திருப்பிக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடையாத பயணிகளுக்கும் இது பொருந்தும்.

பேங்காக்கிலிருந்து புறப்பட்டுச் சென்ற எஸ்கியூ321 பயணிகளுக்குத் தலா $1,000 வழங்கப்பட்டது. பயணிகளின் உடனடிச் செலவுகளுக்காக இத்தொகை தரப்பட்டது.

பாதிக்கப்பட்ட பயணிகள் பேங்காக்கில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவர்களைக் காண விருப்பப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான பயண ஏற்பாடுகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் செய்து தந்தது.

குறிப்புச் சொற்கள்