தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூமிக்கு நெருக்கமாக வரவுள்ள சிங்கப்பூரின் முதல் செயற்கைக்கோள்

2 mins read
a5ca1482-ed68-4904-a1b3-52537b984537
‘இலீட்’ என்ற செயற்கைக்கோள், சிறிய குளிர்சாதனப் பெட்டிக்கு நிகரான அளவு உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பூமிக்கு ஆக நெருக்கமாக செயல்படப்போகும் சிங்கப்பூரின் முதல் செயற்கைக்கோளை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) உருவாக்கியுள்ளது.

உயர்தர நிழற்படங்களைப் பதிவிடும் ஆற்றலும் அதிநவீன தொழில்நுட்பங்களும் கொண்டுள்ள அந்தச் செயற்கைக்கோள், 2025ன் நடுவில் இயங்கத் தயாராகி வருகிறது.

பெரும்பாலான செயற்கைக் கோள்கள், பூமித்தரையிலிருந்து 500 கிலோமீட்டர் முதல் 800 கிலோமீட்டர் வரை உயரே உலாவுகின்றன.

‘இலீட்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘எக்ஸ்ட்ரீம்லி லோ எர்த் இமேஜ் டெக்னாலஜி எக்ஸ்ப்ளோரர் ’ என்ற அந்த 1.2 மீட்டர் உயரமுள்ள புதிய செயற்கைக் கோள், தரையிலிருந்து 250 கிலோமீட்டர் உயரே பறக்கும்.

காற்றுமண்டல உராய்வினாலும் அதிக எதிர்வினை கொண்டுள்ள வாயுக்களாலும் இந்த உயரத்திலுள்ள விண்வெளிப்பகுதி, அவ்வளவாகப் பிரவேசிக்கப்படவில்லை. தாழ்வான இந்த உயரத்தில் வெகு சில செயற்கைக் கோள்களே சஞ்சரிக்கின்றன.

சிறிய குளிர்சாதனப் பெட்டி அளவிலான ‘இலீட்’, என்டியு உருவாக்கியுள்ள 14ஆவது செயற்கைக்கோள் ஆகவும் ஆக சிக்கலான செயற்கைக் கோளாகவும் உள்ளது.

2024க்கும் 2025க்கும் இடையே சூரிய மண்டலத்தில் அதிக வெடிப்புகள் ஏற்படும் காலக்கட்டத்தில் இந்தச் செயற்கைக்கோள் இயங்கத் தொடங்கும்.

சூரிய மண்டலத்தில் ஏற்படும் இத்தகைய வெடிப்புகளால் செயற்கைக்கோள் சேதமடைகின்றன. இருந்தபோதும், இது குறித்து அதிகம் கவலைப்படாமல் சவாலைச் சமாளிக்க என்டியுவின் செயற்கைக்கோள் ஆய்வு நிலையம் முனைகிறது.

“சவால்மிக்க அப்படிப்பட்ட சூழலிலும் ஒரு செயற்கைக் கோளை எங்களால் இயக்க முடியும் என்பதை மெய்ப்பிக்க முடிவது எங்களுக்கு நல்லது,” என்று ஆய்வு நிலையத்தின் தலைவர் திரு லிம் வீ சேங் கூறினார்.

2011ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் 30க்கும் அதிகமான செயற்கைக் கோளை வெளியிட்டுள்ளது.

என்டியுவுடன் அலியேனா, லைட்ஹவுஸ் போட்டோனிக்ஸ், என்யுஎஸ் தெமாசிக் ஆய்வுக்கூடம், எஸ்டி என்ஜினியரிங் சேட்டிலைட் சிஸ்டம்ஸ் ஆகிய அமைப்புகள்  இணைந்து செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளன.

ஒன்றரை ஆண்டுகள் நீடிக்கும் பயணத்திற்குப் பிறகு செயற்கைக்கோள் செயலிழக்கப்படும். சில நாள்களில் அது பூமியை நெருங்கி காற்று மண்டலத்தில் தீப்பற்றிப் பொடிப்பொடியாகக் காற்றோடு கரைந்து போகும்..

குறிப்புச் சொற்கள்