உலகளவில் உள்ள தீங்குநிரல் கட்டமைப்புக்குப் பின்னால் செயல்படுவதாகச் சந்தேகிக்கப்படும் வாங் யுன்ஹவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த சிங்கப்பூரின் அரசாங்க வழக்கறிஞர்கள் ஆதாரத்தைச் சமர்ப்பிக்கத் தயாராகி வருகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த வாங், தான் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு புதன்கிழமையன்று (ஜூன் 12) எதிர்ப்பு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரை நாடு கடத்த ஆதாரம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.
பல பில்லியன் டாலர் தொகையைத் திருட வகைசெய்ததாக நம்பப்படும் 35 வயது வாங், கடந்த மே மாதம் 24ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். அவர் மூன்றாவது முறையாக நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
முன்னதாக மே 31, ஜூன் 6 ஆகிய தேதிகளில் வாங் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா, சிங்கப்பூருடன் நாடு கடத்துவதற்கு வகைசெய்யும் உடன்பாட்டை வைத்துள்ளது. சிங்கப்பூரின் நாடு கடத்தல் சட்டத்தின்கீழ், தங்களை நாடு கடத்துவதன் தொடர்பில் குற்றவாளிகளே அனுமதி வழங்கலாம். அரசாங்க வளங்களை ஆக்கப்பூர்வமான முறையில் உபயோகிக்க வகைசெய்வதும் சம்பந்தப்பட்டோர் தேவைக்கு அதிகமான காலத்துக்கு சிங்கப்பூரில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதும் நோக்கங்களாகும்.
புதன்கிழமையன்று காணொளிவழி நீதிமன்றத்தில் முன்னிலையான வாங், தன்னை நாடு கடத்த அனுமதி வழங்கப்போவதில்லை என்று மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் மாண்டரின் மொழியில் கூறினார்.
அவர் மேலும் ஏழு நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். ஜூன் 18ஆம் தேதியன்று அவரின் வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும்.
அமெரிக்காவின் நீதித்துறைப் பிரிவின் தலைமையில் பல்வேறு தரப்பினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது வாங் கைது செய்யப்பட்டார். அதிலிருந்து அவர் தடுப்புக் காவலில் இருந்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு, சிங்கப்பூர் காவல்துறை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன.
2014ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறருடன் இணைந்து வாங் 911 எஸ்5 பொட்னெட் தீங்குநிரலை உருவாக்கி அதை உலகளவில் மில்லியன்கணக்கான வீடுகளில் உள்ள கணினிகளுக்கு அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.