ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரையும் சிங்கப்பூரையும் இணைக்கும் பெருவிரைவு ரயில் பாதைக்கான (ஆர்டிஎஸ்) பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் முன்னேறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி கட்டுமானப் பணிகள் 77.61 விழுக்காடு நிறைவடைந்துள்ளன. ஜோகூர் பாருவின் வாடி ஹானா பகுதியில் அமைந்துள்ள ரயில் பணிமனைக்கான கட்டுமானப் பணிகள் 82.14 விழுக்காடு நிறைவடைந்துள்ளன. இவ்வாண்டிறுதிக்குள் பணிமனையைத் தொழில்நுட்ப ரீதியாக தயார்ப்படுத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக மலேசியாவின் எம்ஆர்டி கார்ப் பெருவிரைவு ரயில் குழுமம் தெரிவித்தது.
ஆர்டிஎஸ் ரயில் பாதை, ஜோகூர் பாருவின் சாகார், சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் நிலையங்களை இணைக்கும். அப்பாதைவழி ஒரு மணிநேரத்தில் 10,000 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த எண்ணிக்கை, ஒருவழிப் பயணத்துக்குப் பொருந்தும்.
ஆர்டிஎஸ் பாதை, ஜோகூர்-சிங்கப்பூர் காஸ்வே கடற்பாலத்தில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஸ்வே கடற்பாலம், உலகளவில் போக்குவரத்து ஆக அதிகமாக இருக்கும் எல்லைப் பகுதியாகும்.
மலேசியாவில் இடம்பெறும் ஆர்டிஎஸ் பாதையின் பகுதிக்கான பணிகளை எம்ஆர்டி கார்ப் குழுமத்துக்குச் சொந்தமான மலேசிய பெருவிரைவு ரயில் முறை (மலேசியா மாஸ் ராப்பிட் டிரான்சிட் சிஸ்டம்) கையாள்கிறது.

