ஜெர்மனியில் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் யூரோ 2024 காற்பந்து போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அக்காலகட்டத்தில் நடக்கும் சட்டவிரோத விளையாட்டுப் பந்தயத்தைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கிவிடுகின்றனர்.
“ சூதாட்ட கும்பல்களுக்கு உதவுபவர்கள் உட்பட சட்டவிரோத பந்தயத்துக்கு எதிராக காவல்துறை கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கும்,” என்று உள்துறை அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் இணைந்து புதன்கிழமையன்று (ஜூன் 12) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
சிங்கப்பூரில் லாட்டரிகள், விளையாட்டு பந்தயம் ஆகிய சேவைகளை வழங்குவதற்கான உரிமம் பெற்ற ஒரே நிறுவனம் சிங்கப்பூர் பூல்ஸ் என அவ்விரு அமைச்சும் மீண்டும் வலியுறுத்தின. மேலும் உரிமம் பெறாத அல்லது சட்டவிரோத பந்தய நடவடிக்கைகள் சிங்கப்பூரில் அனுமதிக்கப்படாது என்றும் அவை பொதுமக்களை எச்சரித்தன.