சிங்கப்பூரின் ஆகப் பெரிய, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் விவகாரத்துடன் தொடர்புடையோருக்குச் சொந்தமான கடைவீடுகளை விற்கும் முயற்சியில் டிபிஎஸ் வங்கி இறங்கியுள்ளது.
அடகுவைக்கப்பட்ட 13 கடைவீடுகள், மூன்று பில்லியன் வெள்ளி கள்ளப் பண விவகாரத்துடன் தொடர்புடைய இருவருக்குச் சொந்தமானவை. அவற்றை வாங்க சிலர் மொத்தமாக 100 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைத் தர முன்வந்துள்ளனர். அவர்களிடம் கடைவீடுகளை விற்பது குறித்து டிபிஎஸ் பரிசீலித்து வருகிறது.
சம்பந்தப்பட்ட கடைவீடுகள் சைனாடவுன், கேலாங் ஆகிய வட்டாரங்களில் அமைந்துள்ளன.
இந்த கள்ளப் பண விவகாரம் குறித்து தகவல் வெளியாக ஆரம்பித்தவுடன் அதனுடன் தொடர்புடைய சூ ஃபுசியாங், சூ பிங்ஹாய் ஆகிய இருவரும் அவசர அவசரமாக சிங்கப்பூரிலிருந்து வெளியேறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தது. அந்த ஆடவர்கள் இருவரும், இந்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 10 பேரில் ஒருவரான வாங் டேஹாய் எனும் நபருடன் தொடர்புடையவர்கள்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட 10 பேரும் சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
வாங் டேஹாய், சைப்ரஸ் நாட்டு குடியுரிமையைப் பெற்றவரும் ஆவார்.