தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாடகைப் பற்றுச்சீட்டுக்கு ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்

2 mins read
bea0071a-7651-4c22-b7d8-f2f2e1b8e513
வாடகைப் பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெற, மாதாந்திர குடும்ப வருமானம் $7,000 அல்லது அதற்குக் கீழ் இருக்க வேண்டும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிடிஓ வீடுகளுக்காகக் காத்திருக்கும், தகுதியுள்ள குடும்பங்கள் ஜூலை 1 முதல், மாதம் $300 வாடகைப் பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

வீவக வீட்டின் வாடகை அல்லது பொது வீடமைப்புச் சந்தையில் உள்ள அறையின் வாடகைக்கு உதவ அதனை அந்தக் குடும்பங்கள் விண்ணப்பித்துப் பெறலாம்.

பிள்ளைப்பேறு இடைக்கால குடியிருப்புத் திட்டத்தின் (பிபிஎச்எஸ்) கீழ் அந்தப் பற்றுச்சீட்டு வழங்கப்படும்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) விற்பனை நடவடிக்கையில் பங்கேற்றுப் பெற்ற வீட்டின் கட்டுமானம் முடிவுறாத நிலையில் அதற்காகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு இடைக்கால வாடகைக் குடியிருப்புக்கு அந்தப் பற்றுச்சீட்டு கைகொடுத்து உதவும்.

இவ்வாண்டு ஜூலை 1ல் அறிமுகம் காணும் பற்றுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை அடுத்த ஆண்டு ஜூன் வரை நீடிக்கும்.

மாதம் $300 என்னும் கணக்கில் ஆண்டுக்கு $3,600 பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெற, விண்ணப்பதாரரின் வாடகைக் காலம் இவ்வாண்டு ஜூலை 31 அன்றோ அதற்கு முன்னரோ தொடங்கப்பட்டு இருக்க வேண்டும்.

அத்துடன், பற்றுச்சீட்டு கோரும் விண்ணப்பத்தை, வரும் ஆகஸ்ட் 31க்குள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தங்களுக்கு உகந்த வாடகைக் குடியிருப்பைப் பெறவும் பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கவும் போதுமான கால அவகாசம் அளிக்கும் பொருட்டு இந்தத் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக வீவக வியாழக்கிழமை (ஜூன் 13) தெரிவித்தது.

பிபிஎச்எஸ் திட்டத்தின்கீழ் தற்போது 2,000ஆக உள்ள இடைக்கால வாடகை வீடுகளின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டுக்குள் 4,000ஆக அதிகரிக்க பணியாற்றி வருவதாகவும் காத்திருக்கும் குடும்பங்களுக்கு பற்றுச்சீட்டு நடவடிக்கை அதிக ஆதரவை வழங்கும் என்றும் அது குறிப்பிட்டது.

வாடகைப் பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெற, மாதாந்திர குடும்ப வருமானம் $7,000 அல்லது அதற்குக் கீழ் இருக்க வேண்டும். அத்துடன், அவர்கள் வாடகைக்குத் தங்கி இருக்கும் வீடு அல்லது அறையின் வாடகை ஒப்பந்தம் வீவகவில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் குடும்பங்களின் அடையாள அட்டையில் வாடகை வீட்டின் முகவரி இடம்பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வோர் வருங்கால கணவன், மனைவியாக இருப்பின் அவர்கள் தங்களது திருமணச் சான்றிதழை, வாடகைக்குத் தங்கத் தொடங்கியதில் இருந்து மூன்று மாதத்திற்குள் சமர்ப்பிப்பதன் மூலம் வாடகைப் பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெறுவர் என்றும் வீவக தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்