‘சோய்ல்ஃபில்ட்’ கட்டுமானக் குழுமம் $647.5 மில்லியன் கட்டுமான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம் அக்குழுமத்தின் கட்டுமான ஒப்பந்தங்கள் கிட்டத்தட்ட $1.23 பில்லியனை எட்டியுள்ளது.
குழுமத்திற்கு சொந்தமான துணை நிறுவனமான எஸ்.பி புரோக்கியோமென்ட் நிறுவனத்திற்கு துவாசில் சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் விநியோக மைய கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று ஜூன் 13ஆம் தேதி ‘சோய்ல்ஃபில்ட்’ கட்டுமானக் குழுமம் கூறியது.
துவாஸ் துறைமுகத்தில் சரக்குக் கிடங்கு கட்டடங்கள், நுழைவாயில் கட்டடம், பிரதான மின்சார துணை நிலையம், துணை கட்டடங்கள் ஆகியவை அடங்கிய கட்டுமானத் திட்டம் 2027ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது துவாஸ் துறைமுகத்தின் ஒரு பகுதியாகும். கட்டட, கட்டுமான ஆணையத்தின் பசுமைக் குறியீட்டு சான்றளிப்புத் திட்டத்தின் கீழ், குறைந்த எரிசக்தி பயன்பாடு கொண்ட வகையில் கட்டப்படும். அதாவது, அது குறைந்தது 60 விழுக்காடு எரிசக்திச் சேமிப்பை எட்டும்.
“இவ்வாண்டு வரை சிங்கப்பூரில் வழங்கப்பட்ட ஆகப் பெரிய தொழில்துறை திட்டங்களில் துவாஸ் திட்டமும் ஒன்று. அத்துடன் அந்தக் குழுமம் அதன் வரலாற்றில் பெற்றுள்ள ஆகப் பெரிய கட்டுமானத் திட்டமாகும்,” என்று சோயில்ஃபில்ட் கட்டுமானத்தின் நிர்வாக இயக்குநர் லிம் ஹான் ரென் கூறினார்.