ராஃபிள்ஸ் லிங்க்கில் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நால்வர் மீது குற்றச்சாட்டு

1 mins read
ca024207-78bf-4019-9a55-a671f666ffa2
சித்திரிப்பு: - பிக்சாபே

சிங்கப்பூரின் ராஃபிள்ஸ் லிங்க் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் மீது ஜூன் 15ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முகமது அஸ்‌ரோய் ஜஸ்னி, 27, முகமது அஸார் முகமது பஹாகியா, 23, முகமது ஷஃபிக் ரோஸ்லி, 31, முகமது சுஹைமி சுலைமான், 30 ஆகியோர் அவர்கள்.

அறிமுகமற்ற மலாய் ஆடவர்கள் அறுவரைக் காயப்படுத்தும் நோக்கில் கூடிய சட்டவிரோதக் கும்பலில் இடம்பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 147ஆம் பிரிவின்கீழ் நீதிமன்றத்தில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்குத் தலா ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

முன்னதாக, ஜூன் 14ஆம் தேதி அதிகாலை கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நால்வரைக் கைது செய்திருப்பதாகக் காவல்துறை ஜூன் 15ஆம் தேதி தெரிவித்தது.

ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 3.05 மணியளவில் ராஃபிள்ஸ் லிங்க் வட்டாரத்தில் சண்டை நடப்பதாகத் தகவல் கிடைத்ததாக அது கூறியது.

அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, இரு குழுவினருக்கிடையே வாய்ச்சண்டை நடந்ததாகவும் அதில் ஐந்து பேர் கைகலப்பிலும் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

அதிகாரிகள் சிலமுறை எச்சரித்தும் அவர்கள் நடத்தையில் மாற்றமில்லை.

எனவே, காவல்துறையினர் தடியடி உள்ளிட்ட உத்திகளைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்; நால்வரைக் கைது செய்தனர்.

இச்சம்பவத்தின் தொடர்பில் மேலும் சிலரைத் தேடிவருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்