தெம்பனிஸ் வட்டாரச் சந்தையின் மீன் கடைகளுக்கு ஜூன் 15ஆம் தேதி புதிய வரவாக ‘ஜேட் பெர்ச்’ மீன்கள் வழங்கப்பட்டன.
‘ஒமேகா 3’ சத்து நிரம்பிய ஆனால் சல்மன் மீனைவிட மலிவான விலையில் கிடைக்கக்கூடிய இந்த வகை மீன்கள் தெம்பனிசில் உள்ள கொள்கலன் மீன் பண்ணையிலிருந்து முதன்முதலாக விநியோகிக்கப்பட்டவை.
20 அடி நீளமுள்ள கொள்கலன் மீன் பண்ணை தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் அமைந்துள்ள தெம்பனிஸ் ரவுண்ட் சந்தை, உணவு நிலையத்திலிருந்து ஐந்து நிமிட நடைத்தொலைவில் உள்ளது.
இந்த மீன் பண்ணையின் ‘ஜேட் பெர்ச்’ மீன்கள் உயர்தரத்தில் இருப்பதாக மீன் கடைக்காரர்கள் கூறினர். சிங்கப்பூரிலேயே உற்பத்தியானவை என்பதால் நம்பகத்தன்மை அதிகம் என்று கூறிய அவர்கள் கூடுதலானோர் இந்த மீன்களை அதிகம் வாங்குவர் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
300 முதல் 400 கிராம் வரை எடைகொண்ட ‘ஜேட் பெர்ச்’ மீனின் விலை 12 வெள்ளி.
ஜூன் 15ஆம் தேதி கொள்கலன் மீன் பண்ணையிலிருந்து மீன்கள் விற்பனைக்குத் தயாராவதை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல், போக்குவரத்து அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூ இருவரும் பார்வையிட்டனர்.
சென்ற ஆண்டு (2023) நவம்பரில் செயல்படத் தொடங்கிய இந்த மீன் பண்ணை, வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டையில் அமைக்கப்பட்ட முதல் கொள்கலன் மீன் பண்ணையாகும்.
2030க்குள் 30 விழுக்காட்டு ஊட்டசத்துணவை உள்ளூரிலேயே தயாரிக்கும் சிங்கப்பூரின் இலக்குக்கு தெம்பனிஸ் வட்டாரத்தின் பங்களிப்பாக இது கருதப்படுகிறது.

