தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொய்யான கோரிக்கைகள் சமர்ப்பித்து மருத்துவர் $7,600 பெற்றார்

2 mins read
‘சாஸ்’ சுகாதார உதவித் திட்டம்
06485c9d-47fd-45a8-af82-345f49e6d6db
சாஸ் திட்டத்தின்கீழ் பொய்யான கோரிக்கைகளை மருத்துவர் சமர்ப்பித்திருந்தார். - படம்: சாவ்பாவ்

சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டத்தின்கீழ் பொய்யான கோரிக்கைகளை சமர்ப்பித்து சுகாதார அமைச்சிடம் இருந்து மருத்துவர் ஒருவர் $7,627 பெற்றார்.

இந்த திட்டத்தின்கீழ் அந்த மருத்துவர் பிடோக்கில் நடத்திவந்த ஒரு மருந்தகத்திற்கு அந்த $7,627 வழங்கப்பட்டது.

வோங் சூ வாய் எனப் பெயர்கொண்ட அந்த மருத்துவர் பிடோக் டே அண்ட் நைட் கிளினிக் என்றும் ஜூரோங் டே அண்ட் நைட் கிளினிக் என்றும் இரு மருந்தகங்களை நடத்தி வந்தார்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 14) அன்று திரு வோங் இரண்டு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

மேலும் தனது நோயாளிகள் பதிவுகளில் பொய்யான தகவல்களை பதிவு செய்த ஒரு குற்றச்சாட்டையும் அந்த 53 வயது சிங்கப்பூரர் ஒப்புக்கொண்டார்.

இந்தக் குற்றங்களை அவர் 2015, 2016ஆம் ஆண்டுகளில் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மீதான குற்றங்கள் தொடர்பாக ஆகஸ்ட் மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அப்பொழுது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டம் குறைந்த வருமான குடும்பங்களின் மருத்துவ, பல் மருத்துவ செலவினங்களுக்கு மானியம் வழங்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் தனியார் மருந்தகங்கள் பங்கேற்கலாம்.

இந்த மருத்துவ திட்டத்தை சிங்ஹெல்த் பலதுறை மருந்தகக் குழுமமும் தேசிய சுகாதார பராமரிப்பு குழும பலதுறை மருந்தகங்களும் சுகாதார அமைச்சின் சார்பாக செயல்படுத்தி வந்தன.

இதன் தொடர்பில் வோங் தமது பிடோக் மருந்தகம் சார்பாக சிங்ஹெல்த் பலதுறை மருந்தக குழுமத்துடன் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தாம் சாஸ் திட்டத்தில் பங்கேற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதேபோல் தமது ஜூரோங் மருந்தகம் சார்பாகவும் தேசிய சுகாதார பராமரிப்பு மருந்தக குழுமத்துடனும் வோங் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.

பின்னர் 2015ஆம் ஆண்டில் குறைந்தது 40 சந்தர்ப்பங்களில் வோங் சாஸ் வலைத்தளத்தின் மூலம் பொய்யான கோரிக்கைகளை சமர்ப்பித்தார். இதில் சுகாதார அமைச்சு அவரது பிடோக் மருந்தகத்திற்கு $1,755 வழங்கியது.

மேலும், சில நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாகவும் வோங் பொய்யுரைத்தார்.

இதேபோல் 2016ஆம் ஆம் ஆண்டு வோங் குறைந்தது 76 சந்தர்ப்பங்களில் பொய்யான கோரிக்கைகளை சமர்ப்பித்து அமைச்சிடம் இருந்து மேலும் $5,872 பெற்றதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்