எரிவாயு அடுப்பால் காற்றுத் தூய்மைக்கேடு

எரிவாயு அடுப்பால் காற்றுத் தூய்மைக்கேடு

2 mins read
2cf04989-b7b9-4cc0-8fff-2826b32ba7c5
எரிவாயு அடுப்பு. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
multi-img1 of 2

பொதுவாக காற்றுத்தூய்மைக்கேடு என்று சொல்லும்போது பலரும் வெளிப்புறச் சூழல் பற்றித்தான் எண்ணுவார்கள் என்று காற்றுத் தர விஞ்ஞானியான ராஜசேகர் பாலசுப்ரமணியன் கூறுகிறார்.

“நாம் கணிசமான நேரத்தை உட்புறங்களில் செலவிடுதை மறக்க வேண்டாம். அந்த வகையில் வெளிப்புறத்தைவிடவும் உட்புறக் காற்றின் தரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சொல்லலாம்,” என்று பேராசிரியர் பாலா என்றழைக்கப்படும் அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் குறிப்பிட்டார். பேராசிரியர் பாலா, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) சிவில், சுற்றுச்சூழல் பொறியியல் பள்ளியைச் சேர்ந்தவர் ஆவார்.

எரிவாயு அடுப்பு, பொதுவாக நவீன வீடுகளுக்குள் காற்றுத் தூய்மைக்கேட்டை அதிகம் பாதிக்கும் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக காற்றோட்டம் அதிகம் இல்லாத வீடுகளுக்கு இது பொருந்தும்.

சிங்கப்பூரில் சிட்டி எனர்ஜி விநியோகிக்கும் எரிவாயு மூலம் 900,000க்கும் அதிகமான வீடுகளில் எரிவாயு அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

“இந்த எரிவாயு வகைகளில், இயற்கை எரிவாயு, மித்தேன், புரோப்பேன் ஆகியவற்றில் இருப்பதைப் போல் கரிமம் உள்ளது. மேலும், பெரும்பாலான வேளைகளில் ஆக்சிஜனுடன் இடம்பெறும் ரசாயனக் கலவை முறை (கொம்ப‌ஷன்) முழுமை அடைவதில்லை. அது முழுமையடையாதபோது கார்பன் மோனோக்சைட் வாயு வெளியாகலாம்,” என்று பேராசிரியர் பாலா சுட்டினார். அதோடு நைட்ரஜன் ஆக்சைட் வாயுவும் உருவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

உடல்நலனுக்காகவும் பருவநிலை அம்சங்களுக்காகவும் அண்மையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபர்ட் நகரம், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம், அமெரிக்காவின் நியூயார்க் போன்ற பகுதிகளில் புதிய கட்டடங்களில் எரிவாயு அடுப்புகளுக்கான வசதிகளைச் செய்துதர தடை விதித்தன. காற்றோட்டம் அதிகம் இல்லாத அல்லது சிறிய சமையலறையைக் கொண்ட வீடுகளில் எரிவாயு அடுப்புகளால் ஏற்படும் காற்றுத் தூய்மைக்கேடு பிரச்சினையாக இருக்கலாம் என்று பேராசிரியர் பாலா எச்சரித்துள்ளார்.

ஏற்கெனவே சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் நல்ல காற்றோட்டமான சூழலில்தான் மக்கள் சமையல் செய்வதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது. எரிவாயு அடுப்புகள் உடல்நலனுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை அறிவியல் ரீதியாகவும் இதன் தொடர்பில் அனைத்துலக அளவில் இடம்பெறும் நிகழ்வுகளைக் கொண்டும் கண்காணிப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்