எரிவாயு வர்த்தகத்தை விரிவுபடுத்த பெவிலியன் எனர்ஜியை வாங்குகிறது ஷெல்

எரிவாயு வர்த்தகத்தை விரிவுபடுத்த பெவிலியன் எனர்ஜியை வாங்குகிறது ஷெல்

1 mins read
1246bb83-75e4-4489-9061-3b034fd493ad
பெவிலியன் எனர்ஜியை வாங்குவதன் மூலம் ஐரோப்பாவிலும் சிங்கப்பூரிலும் எரிவாயு சந்தையில் நுழைய ஷெல்லுக்கு வாய்ப்பு கிட்டும். - கோப்புப் படம்: சாவ்பாவ்

உலக முதலீட்டு நிறுவனமான தெமாசெக் வசம் உள்ள ‘பெவிலியன் எனர்ஜி’ என்னும் திரவ இயற்கை எரிவாயு நிறுவனத்தை ‘ஷெல்’ எரிபொருள் விநியோக நிறுவனம் வாங்க சம்மதித்து உள்ளது.

திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) துறையில் தனது தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ஷெல் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

இந்த நிறுவனக் கைமாற்றம் குறித்து ஜூன் 13ஆம் தேதி ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தி தற்போது உறுதியாகி உள்ளது.

பலநூறு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உடன்பாட்டின்கீழ், வரும் நாள்களில் பெவிலியன் எனர்ஜியை ஷெல்லுக்கு விற்பது குறித்து தெமாசெக் இறுதி முடிவு எடுக்க இருப்பதாக அந்தச் செய்தி தெரிவித்தது.

இருப்பினும் ஷெல், தெமாசெக் ஆகிய இரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில் விற்பனை பற்றி குறிப்பிட்டபோதிலும் அது தொடர்பான நிதி விவரங்களை வெளியிடவில்லை.

தனது எல்என்ஜி வர்த்தகத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 20 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை விரிவுபடுத்த திட்டமிடுவதாகவும் பெவிலியன் எனர்ஜியை வாங்குவதற்கான உடன்பாடு இந்த இலக்கை எட்ட உதவும் என்றும் ஷெல் தெரிவித்து உள்ளது.

எல்என்ஜி வர்த்தகத்தில் உலகின் தலைசிறந்த நிறுவனமாக ஏற்கெனவே ஷெல் விளங்கி வரும் வேளையில், சிங்கப்பூரிலும் ஐரோப்பாவிலும் உள்ள எரிவாயுச் சந்தையில் கால்பதிக்க புதிய உடன்பாடு அதற்கு வழிவகுக்கும்.

கடந்த ஆண்டு பல பில்லியன் டாலர் லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து, தனது எல்என்ஜி வர்த்தகத்தை அந்நிறுவனம் முழுமூச்சுடன் விரிவுபடுத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்