சிங்கப்பூரின் கடற்கரையோரப் பகுதிகளுக்குப் பரவிய எண்ணெய்க் கசிவைத் துப்புரவு செய்யும் பணிக்கு, தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் கடலலை நீரோட்டம் சவாலாக விளங்குவதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 14ஆம் தேதி பிற்பகல், பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நின்றுகொண்டிருந்த சிங்கப்பூர்க் கொடியை ஏந்திய ‘மரின் ஹானர்’ எனும் எண்ணெய்க் கப்பலை நெதர்லாந்துக் கொடியை ஏந்திய ‘வோக்ஸ் மேக்சிமா’ எனும் படகு மோதியது. இதையடுத்து கடலில் எண்ணெய் கசிந்து, பரவியது.
இச்சம்பவத்தை அடுத்து, ஆணையம் உடனடியாக துப்புரவுப் பணிகளை முடுக்கிவிட்டதாக ஆணையத்தின் துறைமுகத் தலைவர் கேப்டன் சோங் ஜியா சியுவான் கூறினார்.
ஜூன் 18ஆம் தேதி, துப்புரவுப் பணிகளைக் கண்காணிக்கச் சென்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“கடலலைகளால் சிங்கப்பூரின் தெற்குக் கரை வரை எண்ணெய்க் கசிவு பரவியுள்ளது. கடலின் நீர்ப்பரப்பில் காணப்படும் எண்ணெய்க் கசிவு நகர்ந்துகொண்டே இருப்பது துப்புரவுப் பணிக்குச் சவாலாக விளங்குகிறது,” என்றார் அவர்.
“இப்பணியில் உதவ ஆளில்லா வானூர்திகளையும் செயற்கைக்கோள் படங்களையும் பயன்படுத்தி எண்ணெய் இருக்குமிடத்தைக் கண்காணித்து வருகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கடலில் கசிந்த எண்ணெய்யைச் சேகரிக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் சம்பவத்தில் தொடர்புடைய கப்பல்களைச் சுற்றி மிதவைத் தடுப்புகள் போடப்பட்டுள்ளதாகவும் கேப்டன் சோங் கூறினார்.
சம்பவத்தை அடுத்து, சேதமடைந்த கப்பல்களிலிருந்து கடலில் மேலும் எண்ணெய் கசிவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடி முன்னுரிமை தரப்பட்டதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆணையம் தற்போது துப்புரவுப் பணியில் பயன்படுத்தும் கருவிகளில் ‘கரண்ட் பஸ்டர்’ எனும் கருவியும் அடங்கும்.
நீர்ப்பரப்பின்மேல் காணப்படும் எண்ணெய்யைச் சேகரிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு படகுகளுடன் இணைக்கப்படும் இக்கருவி, நீர்ப்பரப்பில் இழுத்துச் செல்லப்படும்போது எண்ணெய்யைச் சேகரிக்கும். இது ஒருமுறையில் கிட்டத்தட்ட ஐந்து டன்கள் வரையிலான எண்ணெய்யைச் சேகரிக்கும் திறன்கொண்டது என்று கேப்டன் சோங் விளக்கினார்.
இவை தவிர, நீர்ப்பரப்பிலிருந்து எண்ணெய்யைச் சேமிப்புத் தொட்டிகளில் சேகரிக்கும் ‘ஸ்கிம்மர்’ கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

