உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் முன்னாள் தலைவருமான திரு சின்னத்தம்பி ராஜேந்திரன் தமது 85வது வயதில் காலமானார்.
நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த இவர், ஜூன் 9 அன்று டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) அதிகாலை 3 மணி அளவில் இயற்கை எய்தினார் என்று அவரது குடும்ப நண்பர்கள் தெரிவித்தனர்.
சட்டத் துறையில் பணியாற்றிய திரு ராஜேந்திரன், அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் வழக்கறிஞராக தம் பணியைத் தொடங்கி, நீதிபதி, மாவட்ட நீதிபதி, பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார். தனியார் சட்ட நடைமுறை நிறுவனமான கட்டார் வோங் & பார்ட்னர்சில் பங்காளியாகவும் இவர் செயல்பட்டுள்ளார்.
நீதிபதியாகப் பணியாற்றியபோது இவர் தீர்ப்பு வழங்கிய வழக்குகளில், 1997ல் நடந்த முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டோங்கும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து சிங்கப்பூர் பட்டாளிக் கட்சியின் திரு ஜே.பி. ஜெயரத்னத்தின்மீது தொடர்ந்த அவதூறு வழக்கும் ஒன்று.
நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேந்திரனின் முன்பாக வழக்கறிஞராக நின்ற திரு எம். ராஜாராம், 72, அவர் மிகவும் அமைதியான மனிதர் என்று சொன்னார்.
“அவரின் இழப்பு நம் சமூகத்திற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பு,” என்று கே&எல் கேட்ஸ் நிறுவனத்தின் தலைவரான திரு ராஜாராம் குறிப்பிட்டார்.
சிறுவயதிலிருந்து அவருடைய நெருங்கிய தோழராகப் பழகிய இலங்கைக்கான சிங்கப்பூர்த் தூதர் எஸ். சந்திரதாஸ், 85, தங்களின் இளமைக் காலத்தை நினைவுகூர்ந்தார். முன்பு ‘சிங்கப்பூர் பல்கலைக்கழகம்’ என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் இருவரும் படித்தார்கள்.
“அவருடன் மலேசியாவின் வெவ்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு காற்பந்து ஆட்டங்களைச் சேர்ந்து பார்த்திருக்கிறேன். நீண்ட காலத்திற்கு நாங்கள் நல்ல நண்பர்களாகப் பழகினோம். அவர் முழுமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்று நம்புகிறேன்,” என்றார் திரு சந்திரதாஸ்.
தொடர்புடைய செய்திகள்
திரு சந்திரதாசும் முன்னாள் சிங்கப்பூர் அதிபர் எஸ். ஆர். நாதனும் ஊக்குவித்ததைத் தொடர்ந்து, சட்டத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற திரு ராஜேந்திரன், இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவராகப் பதவியேற்று, 2014 வரை அப்பொறுப்பில் இருந்தார்.
2005ல் இந்து அறக்கட்டளை வாரியத்தில் உறுப்பினராகச் சேர்ந்து, பின்பு வாரியத்தின் தலைவராகவும் செயல்பட்ட திரு ஆர். ஜெயச்சந்திரன், திரு ராஜேந்திரன் இந்து அறக்கட்டளை வாரிய தலைமைத்துவத்துக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வந்ததுடன், இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் கோயில்களின் நிர்வாகக் கட்டமைப்பிற்கு வலுவான சட்ட திட்டங்களைக் கொண்டு வந்ததாகவும் சொன்னார்.
“இந்து அறக்கட்டளை வாரிய ஆஷ்ரம் நிர்வாகக் குழுக்கள் தங்கள் கொள்கையிலிருந்து விலகாமல் தன்னிச்சையாகச் செயல்பட அவர் வழிநடத்தினார். அவர் தலைவராக இருந்த காலகட்டத்தில் இந்து அறக்கட்டளை வாரியத்திற்கும் அமைச்சுகளுக்கும் இடையிலான தொடர்பு கணிசமாக வலுப்பெற்றது,” என்றார் திரு ஜெயச்சந்திரன்.
மேலும், சமூகம், கலாசாரம், கல்வி தொடர்பான காரணங்களுக்காக நன்கொடைகளை அனுமதிப்பதற்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் சட்டத்தைத் திருத்தம் செய்வதில் திரு ராஜேந்திரன் முக்கியப் பங்கு வகித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாரியத்தின் தலைவராகச் செயல்பட்டு கொண்டிருந்தபோது திரு ராஜேந்திரனுக்கு 2011ல் அரசாங்கத்தின் பொதுச் சேவை நட்சத்திரப் பதக்கம் வழங்கப்பட்டது.
திரு ராஜேந்திரனின் இறுதிச் சடங்கு ஜூன் 19 புதன்கிழமை இரவு 7.15 மணிக்கு மண்டாய் தகனச் சாலையின் 4வது மண்டபத்தில் நடைபெறும்.


