பலவீனமான உலக நிலவரத்தால் சிங்கப்பூரின் வளர்ச்சி வேகம் மெதுவடையும் என கணிப்பு

2 mins read
0cddc00d-7883-4f29-a0c1-37c0bdf8629f
சிங்கப்பூர்ப் பொருளியல் இவ்வாண்டு 2 விழுக்காடு விரிவடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பலவீனமடையும் உலக வளர்ச்சி, முதலீட்டுக்கும் நுகர்வுக்கும் தடங்கலை ஏற்படுத்தும் உயர் வட்டி விகிதங்கள் ஆகியன வர்த்தகம் சார்ந்த சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் என்று புதிய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

இந்த ஆண்டில் உலகப் பொருளியல் வளர்ச்சி 2.6 விழுக்காடாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டு உள்ள அதேவேளை சிங்கப்பூரின் வளர்ச்சி 2 விழுக்காடு விரிவடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் கணிக்கப்பட்டு உள்ள ஆகக் குறைவான வளர்ச்சி விகிதம் இது.

இந்த ஆண்டின் வளர்ச்சி 1 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு கணித்துள்ளதற்கு ஏற்ப புதிய வளர்ச்சி விகிதம் முன்னுரைக்கப்பட்டு உள்ளது.

உற்பத்தித் துறை வழிநடத்தும் வர்த்தகம் தொடர்பான தொழில்கள் படிப்படியாக வேகம் எடுக்கும் என்றும் விமானப் பயணங்களும் சுற்றுலாக்களும் உள்நாடு சார்ந்த துறைகளை ஊக்குவிக்கும் என்றும் கணிக்கப்பட்டதன் அடிப்படையில் அமைச்சின் முன்னுரைப்பு வெளியானது.

சிங்கப்பூரின் உள்நாட்டு உற்பத்தி ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 2.7 விழுக்காடு விரிவடைந்தது. அதற்கு முந்திய காலாண்டில் பதிவான 2.2 விழுக்காடு வளர்ச்சியைக் காட்டிலும் அது அதிகம்.

உலக அளவில் தேவை அதிகரித்து வருவதால் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கக்கூடும் என்று ‘ஆக்ஸ்ஃபர்ட் இக்கனாமிக்ஸ்’ என்னும் பிரிட்டிஷ் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி நீடிக்கும் என்றும் பகுதி மின்கடத்தியில் (செமி கண்டக்டர்) அதிகமான முதலீடுகள் செய்யப்படுவதால் அந்த வளர்ச்சி சாத்தியம் என்றும் அது குறிப்பிட்டு உள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய பகுதி மின்கடத்தி விற்பனை 15.2 விழுக்காடு அதிகரித்தது.

இருப்பினும், வலுவாக மீட்சி கண்ட தென்கொரியா மற்றும் தைவானுடன் ஒப்பிடுகையில் மின்னியல் ஏற்றுமதி மூலம் சிங்கப்பூர் அடையும் பலன்கள் பின்தங்கியே உள்ளன. பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இதே நிலைதான்.

குறிப்புச் சொற்கள்